சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை துணைக் கலந்தாய்வில் 8,843 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 695 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதையடுத்து எஞ்சிய 57 ஆயிரத்து 417 இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வுக்குரிய விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 28ல் தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 16 ஆயிரத்து 814 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 15 ஆயிரத்து 689 பேர் மட்டுமே தகுதிபெற்றனர். இவர்களில் 9 ஆயிரத்து 446 பேர் வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 179 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 8843 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை உறுதி செய்த மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து எஸ்சிஏ (அருந்ததியர்) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொது மற்றும் துணைக் கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்று கல்லூரிகளில் சேர்ந்த எஸ்சி பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம். அந்த மாணவர்கள் ww.tneaonline.org என்ற இணையதளம் வழியாக தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆக, நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 538 இடங்கள் நிரம்பியுள்ளன.
The post பி.இ. கவுன்சலிங் துணை கலந்தாய்வில் 8,843 இடங்கள் நிரம்பின appeared first on Dinakaran.