திருமலை: ‘ஸ்பெஷல் ஃப்ளேவர்’ எனக்கூறி விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல ஐஸ்கிரீம் பார்லர் இயங்கி வருகிறது. இங்கு ஐஸ்கிரீம்களில் விஸ்கி கலந்து ‘ஸ்பெஷல் ஃப்ளேவர்’ எனக்கூறி அதிக விலைக்கு விற்பதாக கலால்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் ஐஸ்கிரீம் பார்லரில் சோதனை நடத்தினர். அதில் 60 கிராம் ஐஸ்கிரீமில் சுமார் 100 மில்லி விஸ்கி கலந்து விற்பது தெரிந்தது. இதையடுத்து 11.5 கிலோ விஸ்கி ஐஸ்கிரீம்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையாளர்களான தயாகர் ரெட்டி, ஷோபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்திருப்பதை மறைத்து மிகவும் ருசியானது. சாப்பிட்டவுடன் கிக்காக இருக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தனர். இதனால் விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை களைக்கட்டியது. ஐஸ்கிரீம் சுவையாக இருந்ததால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தினமும் 4 முறை இந்த பார்லருக்கு வந்து வாங்கி சென்றதும் தெரிந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக ஐஸ்கிரீம் ஆர்டர்களை யாராவது பெறுகிறார்களா? எவ்வளவு காலமாக இந்த தொழிலை நடத்தி வருகிறீர்கள்? அவர்களின் வழக்கமான வாடிக்கையாளர்கள் யார்? நகரத்தில் ஒன் அண்ட் பைன் ஐஸ்கிரீம் கிளைகள் எங்கே உள்ளன? என கைதானவர்களிடம் இருந்து அவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
The post `ஸ்பெஷல் ஃப்ளேவர்’ எனக்கூறி விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை: 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.