- பரங்கிமலை ராணுவப் பயிற்சி
- முகாம்
- சென்னை
- பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமி
- இந்தியா
- ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி
- Parangimalai
சென்னை: பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமில் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த இந்தியாவை சேர்ந்த 258 ஆண்கள், 39 பெண்கள் மற்றும் நட்பு நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, லெசோத்தோ, செச்சில்ஸ், தான்சானியா, உகாண்டா மாலத்தீவு போன்ற நாடுகளை சேர்ந்த 10 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 312 பயிற்சி முடிந்த இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு பரமேஷ்வரர் திடலில் நடந்தது. இந்த அணி வகுப்பு விழாவில் இந்திய ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜாசுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் கம்பீர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதில் சிறப்பு அணிவகுப்பு நடத்திய சாம்ரத் சிங்கிற்கு சிறப்பு வீரவாள் பரிசும், சிம்ரன்சிங் ரதிக்கு தங்கப் பதக்கமும், தனிஷ்கா தாமோதரனுக்கு வெள்ளிப்பதக்கமும், தேவேஷ் சந்திர ஜோஷிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர், ராணுவ துணை தளபதி ராணுவ வீரர்களை பாராட்டி பேசும்போது, ‘‘பயிற்சி நிறைவு செய்த இளம் ராணுவ அதிகாரிகள் நாட்டிற்கு தன்னலமற்ற சேவை புரிவதுடன் பெருமை வாய்ந்த ராணுவ மாண்புகளை நிலைநாட்டுவது உங்கள் கடமை’’ என்றார். பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் சட்டையின் தோள்பட்டையில் மூடி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர சின்னத்தை அவர்களது பெற்றோர் திறந்து விடும் நிகழ்ச்சியின்போது பெற்றோர் தங்களது பிள்ளைகளை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர்விட்டனர்.
விழாவின் போது ராணுவ வீரர்களின் பைப் இசை இசைக்கப்பட்டது. பின்னர் ராணுவ தேச பக்தி பாடல் பாடப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் துள்ளி குதித்து தாய்மண்ணை முத்தமிட்டனர். தங்களின் துப்பாக்கிகளை மேலே உயர்த்தியும் தொப்பிகளை தூக்கிப்போட்டும் ஆரவாரம் செய்தனர். பின்னர் குழுக்களாக பிரிந்து நடனமாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
The post பரங்கிமலை ராணுவ பயிற்சி முகாமில் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை appeared first on Dinakaran.