- சீமான் கட்சி
- சிவராமன்
- கருணாகரன்
- ஜனாதிபதி
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
- காயனா நாம் தமிழர் கட்சி
- பார்கூர்
- கிருஷ்ணகிரி
கைதான நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரான கருணாகரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் பர்கூரில் போட்டியிட்டார்.
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமனின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை எரித்த, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஒரு கிராமத்தில் தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்துகொண்ட 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சியின் மாஜி நிர்வாகி சிவராமனால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினர். இச்சம்பவத்தில் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட மொத்தம் 13 பேரை, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கைது நடவடிக்கைக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து, முதல்வர் உத்தரவின் பேரில், ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக நலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் நடத்திய விசாரணையில் வேறு ஒரு தனியார் பள்ளியில், சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளரும், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி பயிற்சியாளருமான கோபு(47) என்பவரை நேற்று முன்தினம், சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரான சுண்டம்பட்டியை சேர்ந்த கருணாகரன் என்பவரை, நேற்று காலை புலனாய்வு சிறப்பு குழு போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் பர்கூரில் போட்டியிட்டவர். கடந்த 11.8.23ல் பர்கூர் ஒரப்பம், பேக்கரி கடைக்கு நிர்வாகிகளுடன் சென்ற கருணாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏரியை தூர்வார வேண்டும் என கூறி, அங்கிருந்த உரிமையாளரிடம் ரூ5 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ரூ500 மட்டுமே கொடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர், அங்கிருந்த பொருட்களை உடைத்து ஊழியர்களை தாக்கினர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார், கருணாகரனை கைது செய்தனர். பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட சிவராமனுடன் கருணாகரனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால் ராயக்கோட்டை சாலையில் உள்ள சிவராமனின் அலுவலகத்திற்கு, கருணாகரன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில், சிவராமன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதும் அவரது அலுவலகத்திற்கு சென்ற கருணாகரன், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து எரித்திருப்பது சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவர் அடிக்கடி சிவராமன் அலுவலகத்திற்கு சென்று வந்ததால், தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து எரித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சீமான் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது: சிவராமன் ஆபீசில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எரித்தவர் appeared first on Dinakaran.