புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் மீது அதிரடி குற்றச்சாட்டை கூறியிருந்தது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் ஏராளமான பங்குகளை வைத்துள்ளாதாக குறிப்பிட்டு இருந்தது. இதனிடையே மாதபி புச் விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பங்குகள் என்று ரூ.16.8கோடி பெற்றதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது குறித்து ஐசிஐசிஐ விளக்கமளித்தபோதும் மாதபி புச் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது காங்கிரஸ் மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. செபியால் விசாரிக்கப்பட்டு வரும் நிறுவனத்துடன் இணைந்த நிறுவனத்திடம் இருந்து அவர் வாடகை வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘தேசிய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பை பொறுத்தவரையில், வௌிப்படை தன்மை, நேர்மையின் வீழ்ச்சியைகாட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை என்ற கேள்வியை உண்மையில் பிரதமர் மோடியிடம் தான் கேட்க வேண்டும். தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் தரவுகளின்படி தனித்துவமான பான் எண்களை கொண்ட சுமார் 10கோடி இந்தியர்கள் இதில் சில வகையான முதலீடுகளை கொண்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? மாதபி புச் மீது பிரதமர் மோடி ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர் எதற்கு பயப்படுகிறார்? \” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பர துறை தலைவர் பவன் கேரா கூறுகையில்,‘‘2018ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மாதபி புரி புச் வோக்கார்ட் லிமிடெட் நிறுவனத்திடம் இணைந்த கரோல் இன்போ சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாடகை வருமானமாக ரூ.2.16கோடி பெற்றுள்ளார். வோக்கார்ட் நிறுவனம் 2023ம்ஆண்டு உள்வர்த்தகம் உட்பட பல்வேறு வழக்குகளுக்காக செபியால் விசாரிக்கப்பட்டு வந்தது. செபி தலைவர் வெளியே வந்து தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
The post செபி தலைவருக்கு எதிராக புகார்கள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.