×
Saravana Stores

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கு மறு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ. 76 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதேபோல் அதே காலக்கட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவிக்கு எதிராக ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த இரு வழக்குகளை விசாரித்த வில்லிபுத்தூர் நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் கடந்த 2022ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. மேற்கண்ட இரு வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு வழக்குகளையும் மீண்டும் விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டார்.

மேற்கண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவரது மனைவி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் கபில் சிபல் ஆகியோர், “ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து தற்போது மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது சட்ட விதிகளுக்கு எதிரானது. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் எவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்.

தானாக முன்வந்து வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக ஏற்கனவே சர்க்காரியா வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதையும் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இத்தகைய காரணங்களால் முடித்து வைக்கப்பட்ட தங்களது வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். மேலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை மீண்டும் மறு விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

 

The post அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கு மறு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : KKSSR ,Thangam Tennarara ,Supreme Court ,New Delhi ,Thangam Tennarasu ,Thangam Tenaras ,Dinakaran ,
× RELATED அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்...