×
Saravana Stores

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் விளக்கம்

அருப்புக்கோட்டை: அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் புதிய கட்டிடங்களை நேற்று திறந்து வைத்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் பேசியதாக ஒரு தகவல் வெளியானது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் சில பேருக்கு வராமல் உள்ளது. ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விடுபட்டு போனவர்கள் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் கணக்கெடுப்பு செய்து அதன்பின் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப்படும். மேலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, உதவித்தொகை வாங்குவதற்குரிய உத்தரவு நகல் வைத்திருப்பவர்களுக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று சொன்னார்கள். விரைவில் கொடுத்துவிடுவோம் என்று சொன்னேன்.

ஆனால் அந்த பெண் பக்கத்து வீட்டுக்காரர் 8 மாதம் வாங்கிவிட்டார். அதனால் 8 ஆயிரம் ரூபாய் சேர்த்து கொடுக்க வேண்டும் என சொன்னார். எனவே பெண்கள் விவரமாகத்தான் உள்ளீர்கள். உங்கள் வீட்டுபிள்ளை நான். நமக்காக உழைக்கக் கூடியவராக நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எனக்கும் முதல்வருக்கும் நீங்கள் உறுதுணையாக எப்போதும் இருக்க வேண்டும் என கூறியதாக வலைத்தளங்களில் வெளியானது. இதனை மறுத்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்’’ என பதிவிட்டுள்ளார்.

The post அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Aruppukkottai ,Tamil Nadu Revenue and Disaster Management ,Minister KKSSR ,Aruppukkottai, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED நெல்லையில் செயல்படும் மத்திய...