முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி தந்து ஆட்கொள்ளும் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் தலம் திருச்செந்தூர்.
‘அலைவாய்க் கரையின் மகிழ் சீர்க்குமர!’
– என்று திருப்புகழும்
‘ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும்
கடற் செந்தில் மேவிய சேவகனே!’
– என்று கந்தர் அலங்காரமும் திருச்செந்தூரைச் சிறப்பிக்கின்றன.
கடற்கரைக்கு மிக அருகிலேயே கம்பீரமாகக் காட்சி தருகிறது. 137 அடி உயரமுள்ள ராஜகோபுரம். பொதுவாக கடற்கரையில் எங்குமே கட்டிடங்களை நாம் பார்த்திருக்க முடியாது. காரணம், தரையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கட்டிடங்கள் பல வீனப்பட்டு விரைவிலேயே சேதமாகிவிடும். அப்படியிருக்க, 3000 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தூர் ஆலயம் பொலிவுற்று விளங்குவது ஒன்றே சண்முகப் பெருமானின் திருவருளுக்கு சாட்சி பகர்கின்றது அல்லவா!
ஆலயத்தில் கந்தவேளின் கருவறை கடற்கரை நீர்மட்டத்திற்கும் கீழாக அமைந்திருப்பது, நம் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துகின்றது. மூலஸ்தானத்தில், கருவறையில் அருள்பாலிக்கும் கந்தப் பெருமானைத் தரிசித்த அன்பர்கள் தரை மட்டத்தை அடைய ஏறுமுகமாகத் தான் செல்ல முடியும். ஆறுமுகத்தை வணங்கும் பக்தர்கள் வாழ்வில், இனி ஏறுமுகம்தான் என்று திருச்செந்தூர் ஜயந்திநாதர் உறுதிப்படுத்துவதாக இவ்வமைப்பு அமைந்துள்ளது.‘‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’’
“அசுரரை வென்ற இடம் – அது
தேவரைக் காத்த இடம்’’!
சூரபத்மனை வெற்றி கொண்ட
சுப்ரமண்யர் ஜெயந்திநாதர் என்றே
அழைக்கப்படுகிறார்.
‘மகா புனிதம் தங்கும் செந்தூர்’
‘பரம பதமாய செந்தில்’
‘கயிலை மலையனைய செந்தில்’
என்றெல்லாம் திருச்செந்தூர் மகிமையை ஏற்றிப் போற்றிப்பாடுகிறது. திருப்புகழ். சந்தச் சொற்கள் சதங்கைகட்டி ஆடும் ‘சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த’ திருப்புகழைத் தலம்தோறும் பாடிய அருணகிரிநாதர்க்கு திருச்செந்தூரில் ஆறுமுகப் பெருமான் தன் நடனக் காட்சியையே அன்பளிப்பாக தந்து மகிழ்கிறார்.
‘‘கொண்ட நடனம் பதம்
செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே!’’
என்று ஆறுமுகனின் ஆடல் தரிசனம் கண்ட அருணகிரியார் அகம் குளிர, முகம் மலரப்பாடுகிறார்.
“தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டுநன்
சந்தொட மணைந்துநின் றன்பு போல
கண்டுற கடம்புடன் சத்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன்முன் சந்தியாவோ!’’
முருகன் ‘தகப்பன்சாமி’ என்று போற்றப்படுகிறார்.
‘சிவனார் மனங்குளிர உபதேச மந்திரம்
இருசெவி மீதிலும் பகர்செய் குருநாதா.’
பிரணவத்தின் பொருளை தந்தைக்கே விளக்கிய தன்மையால் அப்பாவைவிட ஒருபடி அதிகம் என சமயச் சான்றோர்கள், மொழிகின்றனர்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது என்பது திருக்குறள் வாசகம் அல்லவா அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவான முருகப் பெருமான் ஆடற்கலையிலும் நடன சபாபதி போலவே சிறந்து விளங்குகிறார் என்று இந்த திருச்செந்தூர் திருப்புகழ் நமக்கு விளங்குகின்றது. தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என ஆறு அணிகலன்கள் ஆறுமுகனின் சரணார விந்தங்களிலே சப்திக்கின்றது திருமார்பிலே கடப்பமலர்மாலை அணிந்து, தலையிலே ஆறுமணி மகுடங்கள் ஒளிர, திருக்கரத்திலே வேலாயுதம் மிளிர பன்னிரு விழி மலர்களும், சந்திர ஒளிவீசும் திருமுக மண்டலமும் தரிசித்து புளகாங்கிதம் அடைகிறார் அருணகிரியார்.
“எழுதரிய அறுமுகமும் அணிநுதலும் வைரமிடை
இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும் துங்க நீள்
பன்னிரு கருணை விழி மலரும் இலகு
பதினிரு குழையும் ரத்னக் குதம்பையும்
பத்மகரங்களும் செம்பொன் நூலும்
மொழி புகழும் உடை மணியும் அரைவடமும் அடியிணையும்
முத்தச் சதங்கையும் சித்ர சிகண்டியும் செங்கை வேலும்
முழுதும் அழகிய குமர!’’
இருகண்கள் கொள்ளாத பேரின் பத்தின் இணையற்ற வடிவமாக ஜொலிக்கின்றார் திருமுருகன். அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும் ஒப்பாரும்மிக்காரும் இன்றி திகழ்கின்றார் முருகன்! நாணற்காடான சரவணத்தில் திருமுருகன் பிறந்தபோது குழந்தையின் அழகைக் கண்டு வியந்தார் திருமால். தன்னை வெல்லும் பேரழகோடு பிறந்த ஆறுமுகனை உச்சிமோந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் திருமால். சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி சொல்லாமற் சொன்ன மௌன உபதேசம் மூலம் ஞானம் வழங்கியவர் சிவபெருமான்! அத்தகைய ஆதி குருவான சிவனார்க்கே பிரணவ உபதேசம் செய்து அறிவில் பிரகாசித்தவர் ஆறுமுகன்!“ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனின் ஆற்றல் சொல்லற்கரியது’’.
ஆற்றல் வாய்ந்த சூரபத்மனோடு ஆகாயத்திலும், கடலிலும், பூமியிலும் போர் புரிந்து அவனை வீழ்த்தியவர் கந்த பெருமான். சூரனைத் தோற்கடித்த சூராதி சூரர் சுப்ரமண்யர்! எனவே ஆற்றலிலும் முதன்மை பெற்றவரே முருகன். போர்க்களத்தில் சூரன் திகைத்து அச்சமுற்று நிலை குலைந்து போகும் வண்ணம் விசுவரூபம் எடுக்கிறார் முருகன்.
“புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெங்களம் கொண்ட போது
பொன்கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து
முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர
கொண்ட நடனம் பதம்
செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனம் கொளும் தந்த வேளே!
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!’’
‘மீ உயர் தோற்றம்,’ ‘திருப்பெரும் வடிவம்’ என முருகன் கொண்ட விஸ்வரூபத்தை மொழிகின்றன முருகன் பாடல்கள்.
“பொன்கிரி எனச்சிறந்து
எங்கிணும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூர’’
என பொருத்தமாகப் புகல்கிறார்
அருணகிரியார்.
முருகன் ஆடி வருகிற அழகை நடராஜர் பாராட்டி மகிழ்கிறார் என்றும் முருகன் விஸ்வரூபம் எடுத்த மாண்பை மகாவிஷ்ணு புகழ்கிறார் என்றும் நயம்பட நவில்கின்றது இச்செந்தூர் திருப்புகழ். கும்ப முனியாகிய அகத்தியர் கும்பிடும் குமரவேள் வள்ளி நாயகியார் உடைய அன்புக்குக் கட்டுப்பட்டு ‘கொங்கை குறமங்கையின் சந்த மணம்’ நுகர்ந்து சந்தோஷம் அடைகிறார் என முருகனின் உயர்வையும், பணிவையும் ஒருசேர இப்பாடலில் உரைக்கின்றார்.
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே!
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post திருச்செந்தூரின் கடலோரத்தில்… appeared first on Dinakaran.