×
Saravana Stores

பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்

♦ ராமேஸ்வரம் கோயிலின் நுழைவு வாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு.
♦ மயிலாடுதுறை – திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்.
♦ தாமரைமலரில் அமர்ந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.
♦ கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர், ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்புநிற மேனியராகவும் காட்சி தருவார்.
♦ சென்னை – மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப்பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில் வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். இவரை வலஞ்சை விநாயகர் என்கின்றனர்.
♦ திருவையாறுகோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதை ஊர் மக்களுக்கு உணர்த்தி காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின்ஆவுடைப் பகுதியின்மீது அமர்ந்தருளும் ஆவுடைப் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
♦ மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள முக்குருணீ விநாயகரின்விக்கிர திருமேனி திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும் போது கண்டெடுக்கப்பட்டது.
♦ கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனிகல் நுரையால் செய்யப்பட்டதாக ஐதீகம். இவருக்கு அபிஷேகம் கிடையாது.
♦ திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக்காசு விநாயகர் விக்கிரகத்தை சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.
♦ விநாயகப் பெருமான் அம்மை அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் வலம் வந்த விநாயகரை தரிசிக்க வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
♦ மயிலாடுதுறை தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள்புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார்.
♦ ஆந்திர மாநிலம் சைலம் அருள்மிகு மல்லிகார்ஜூனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்று வந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால் இவரை சாட்சிக் கணபதி என்கின்றனர்.
♦ கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு விநாயகசதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம். வழிபாடுகள் முடிந்ததும் பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள் அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

The post பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Rameshwaram temple ,Mayiladuthura ,Thiladornapura ,Poondotam ,Thiruvarur ,Aditvinayagar ,
× RELATED தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!