நன்றி குங்குமம் தோழி
‘‘எனக்கு சரிவர கிடைக்காத கல்வி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது பேராசை’’என்கிறார் சென்னையை சேர்ந்த சம்சுல் ஹூதா பானு. பெண் தொழில்முனைவோராக அசத்தி வரும் இவர் தனது ஓய்வு நேரங்களில் கல்வியின் அவசியம், கிராஃப்ட் தயாரிப்பு மற்றும் சுய தொழில் குறித்த விஷயங்களை தன்னிடம் படிக்க வரும் பிள்ளைகளுக்கு இலவசமாக சொல்லித் தருகிறார். பிஸியான தொழில் முனைவோராகவும் அதே சமயம் சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருந்து வரும் ஹூதா, தன்னை சுற்றியுள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் மற்றும் கை வேலைகள் பலவற்றை கற்றுத் தருவதோடு அதனை வைத்து அந்தப் பிள்ளைகள் சம்பாதிக்கவும் கற்றுத் தருகிறார்.
‘‘நான் மசாலாப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதற்காக உதவ வரும் பெண்களில் பலர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிக்கே அனுப்பி வருகிறார்கள். காரணம், அவர்களுக்கு வரும் வருமானமே அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் சரியாக இருக்கும். இதில் அந்தப் பசங்களுக்கு டியூஷன் வைக்க அவர்களிடம் போதிய வசதி இல்லை என்று சொல்வார்கள்.
நன்றாக படிக்கும் பசங்களுக்கு டியூஷன் வைத்தால் அவர்கள் மேலும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் அதற்கு போதிய வருமானம் இல்லை என்று ஆதங்கப்படுவார்கள். அப்போதுதான் என்னுடைய ஓய்வு நேரத்தில் இவர்களின் குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லித்தரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அதனை நடைமுறைப்படுத்தினேன். எனக்கு படிக்க ஆசை இருந்தாலும் என்னால் பெரிய அளவில் படிக்க முடியவில்லை.
இந்தப் பிள்ளைகளாவது நன்றாக படித்து முன்னேறட்டும் என்ற எண்ணம்தான் காரணம். இதில் மிகவும் வறுமையில் உள்ள சில பிள்ளைகளுக்கு நானே கல்விக் கட்டணமும் செலுத்தி அவர்களை பள்ளியில் படிக்க வைக்கிறேன். கல்வி ஒன்றுக்குதான் நமது வாழ்வை மாற்றிப் போடும் சக்தி இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அந்தக் காரணம்தான் இந்தக் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கிறேன்’’ என்றவர், கலை துறை மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார்.
‘‘எனக்கு இந்த கிராஃப்ட் செய்வதில் இருபது வருட அனுபவங்கள் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனது தையல் ஆசிரியரை பார்த்து நிறைய கை வேலைகளை செய்து வந்தேன். அதன் பிறகு பிற்காலத்தில் சாந்தி பிரபாகரன் என்பவரிடம் முறையாக கைவினைப் பொருட்கள், பானை மற்றும் கண்ணாடிகளில் பெயின்டிங் செய்வது குறித்து அறிந்து கொண்டேன். நான் மசாலா வேலையில் ஈடுபட்டு இருந்ததால், கைவினை வேலையினை தொழிலாக செய்யும் எண்ணம் இல்லை.
ஆனால் கற்றுக்கொண்ட இந்த கலை மறக்காமல் இருக்க அதனை பலருக்கும் கற்றுத்தர விரும்பினேன். ஆர்வமாக கேட்பவர்களுக்கு சொல்லித் தருகிறேன். இன்று சிலர் அந்த கைவேலைகளை திறம்பட கற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்து சம்பாதிக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல குழந்தைகள் ஒயர்கூடைகளை பின்னி விற்பனை செய்து வருகிறார்கள். கல்வியோடு அனைவருமே ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதன் மூலம் அதில் வரும் வருமானத்தினால் அவர்களின் செலவினை சமாளிக்க முடியும்.
நாங்க பெரும்பாலும் பாட் பெயின்டிங், ஒயர் கூடைகள் பின்னுதல், சின்னச் சின்ன கைவினைப் பொருட்கள், கிளாஸ் பெயின்டிங் போன்றவை எனக்கு தெரியும். அதைத்தான் நான் அவர்களுக்கு சொல்லித்தருகிறேன். அவர்களும் சின்னச் சின்ன பொருட்களை செய்து, அதனை விற்பதினால் வரும் வருமானத்தைக் கொண்டு தங்களின் படிப்புச் செலவினை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இப்போது சிறிய அளவில் செய்யும் இவர்கள் படிப்படியாக மேலும் பல பொருட்களை செய்ய துவங்கினால், எதிர்காலத்தில் இதையே அவர்களின் தொழிலாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
‘‘நானும் என் கணவர் இருவரும் இணைந்துதான் இந்த மசாலா தொழிலை நிர்வகித்து வருகிறோம். சின்ன வயசில் எனக்கு கிடைக்காத கல்வி என் பசங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என் மகன் தற்போது ஐ.டி துறையில் இருக்கிறார். மகள் மருத்துவராக உள்ளார். கல்வியே வீட்டையும் நாட்டையும் முன்னேற்றும். அதனாலேயே என்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வியின் பெரும் அவசியத்தை உணர்த்துகிறேன். என்னுடைய அனைத்து முயற்சிக்கும் என் குடும்ப உறுப்பினர்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறார்கள். இந்த சமூகம் எனக்கு அளித்தவற்றை திரும்ப செலுத்த நினைக்கிறேன்” என்றார் சம்சுல் ஹூதா பானு.
தொகுப்பு: தனுஜா
The post இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்! appeared first on Dinakaran.