×

திருவண்ணாமலையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த காட்சிக் கையேடு: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தி இந்து குழுமம் இணைந்து தயாரித்துள்ள “திருவண்ணாமலை – காட்சிக் கையேட்டினை (Coffee Table book of Thiruvannamalai)” அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளோடு அரிய பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பதிப்பகப் பிரிவின் மூலம் இரண்டு கட்டங்களாக 216 அரிய பக்தி நூல்களும், கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் உருவான “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடர் நூலாக்கம் செய்தும், இந்து குழுமத்துடன் இணைந்து “நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாட்டு முறைகள்” ஆகியவற்றை விளக்கிடும் “Folk Deities of Tamil Nadu” என்ற நூலும், முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையும், இந்து குழுமமும் இணைந்து பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை விளக்கிடும் வகையில் 156 பக்கங்களுடன் அழகிய வடிவமைப்பில் கண்கவர் வண்ணப் படங்களுடன் தயாரித்துள்ள “Tiruvannamalai – The shrine of Eternal Fire” என்ற காட்சி கையேட்டினை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டார்.

இக்கையேட்டில் திருவண்ணாமலை பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகள், திருக்கோயில் தலவரவாறு, தீபத்திருவிழா, மூலிகை ஓவியங்கள், சிற்பங்கள், திருப்புகழ் எழுதிய அருணகிரிநாதரின் வாழ்க்கை குறிப்புகள், சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி வாழ்வியலோடு, திருவண்ணாமலை திருக்கோயிலின் திருவிழாக்கள், அம்மனி அம்மாளின் பங்களிப்பு, ஒய்சாலா மன்னர் பல்லாளர்-3 ன் ஆன்மிக ஈடுபாடு ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் இரா. சுகுமார், சி.ஹரிப்ரியா, இந்து குழும பதிப்பக பிரிவின் துணை பொது மேலாளர்கள் எம்.தியாகராஜன், பி.சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த காட்சிக் கையேடு: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Minister Shekhar Babu ,CHENNAI ,Minister Shekharbabu ,Hindu Religious Endowments Department ,The Hindu Group ,Hindu Religious Endowment Department ,
× RELATED தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை...