ஊட்டி, செப்.4: நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள பயணியர் நிழற்குடைகள் மது அருந்தும் பாராக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சாலைகள், கிராமபுற சாலைகளில் உள்ள முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி நிதியின் கீழ் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரு சில இடங்களில் இவை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பகுதிகளில் பயணியர் நிழற்குடைகள் முறையாக பராமரிப்பதில்லை. அவை குடிமகன்களின் கூடாரமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
பல பயணியர் நிழற்குடைகள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. ஊட்டி-மஞ்சூர் சாலையில் தேவர்சோலை பகுதியில் உள்ள நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் உள்ள பயணியர் நிழற்குடைகள் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. போதை தலைக்கேறும் ஆசாமிகள் உள்ளேயே அசுத்தம் செய்வதோடு காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை வீசி சென்று விடுகின்றனர். இதனால் இவை அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல நிழற்குடைகள் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் பயணியர் நிழற்குடைகளை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிழற்குடைகள் மது அருந்தும் பாராக மாறிய அவலம் appeared first on Dinakaran.