திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்த அந்த பெண் இனி குழந்தை வேண்டாம் என்று கருக்கலைப்புக்கு மருந்து பயன்படுத்தி வந்துள்ளார். அன்றிலிருந்து அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்களை சந்தித்து வயிற்றுவலி குறித்து கூறினார்.
உடனே டாக்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருப்பையில் கட்டி இருப்பதாக கருதப்பட்டது. இதனால் மேலும் தெளிவுபடுத்துவதற்காக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கரு முழுமையாக கலையாததால் 24 வார குழந்தை எலும்பு கூடு கருப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் எலும்புக் கூட்டை அகற்றினர். இதுகுறித்து கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சிவானந்தா, கூறியதாவது: இது மிகவும் அரிதாகவே நடக்கும். கரு முழுமையாக கலையாததால் எலும்பு கூடு கருப்பையில் தங்கிவிடுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற 25 க்கும் குறைவான சம்பவங்கள் நடந்துள்ளது என்றார்.
The post மாத்திரை சாப்பிட்டும் கரு முழுமையாக கலையவில்லை பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு: அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர் appeared first on Dinakaran.