×

மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது: தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனுதாரரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பை அவரது மனைவியான ஜோதி தட்டி கேட்டார். ஆத்திரத்தில் ஜோதியை வீட்டுக்குள் பூட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார். ஜோதியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி முன்பாக ஜோதியின் மரண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதில், கொடுமை செய்தது, கணவர் தன்னை தீ வைத்து எரித்ததை ஜோதி உறுதிப்படுத்தினார். இதையடுத்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம், ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ரமேஷ் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் தனக்கு எதிரான வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை எப்படி சந்தேகிக்க முடியும். அதற்கான முகாந்திரமே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மனுவை தள்ளுபடி செய்து முடித்து வைத்ததோடு, ரமேஷின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.

The post மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது: தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Ramesh ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்