திருப்பூர், செப்.3: சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 2023ம் ஆண்டில் 148 குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 124 பணியாளர்களுக்கு மட்டுமே கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதி 24 பணியாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். உதவியாளர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு வழங்குவது என பட்டியல் தயாரிக்கப்பட்டது.
2023ல் 39 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. உதவியாளர்கள் 26 பேர் காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். இது குறித்து பலமுறை மாவட்ட திட்ட அலுவலர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இதில், சங்கத்தின் மாநில நிர்வாகி அனிதா, மாவட்டச் செயலாளர் சித்ரா, பொருளாளர் பேபி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வீரபாண்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
The post மாவட்ட திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.