×

எதிர்காலத்தில் பார்முலா 1 ஸ்ட்ரீட் டிராக்காக சென்னை வர வேண்டும் சுற்றுலா பெருகும் என தொழில்துறையினர் வரவேற்பு: ‘எதிர்ப்பு குரல்களை அலட்சியப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’

சென்னை: பார்முலா கார் பந்தயங்கள் நடத்துவதன் மூலம் சுற்றுலாத் துறை வெகுவாக வளர்ச்சியடையும் என்று கருத்து தெரிவித்துள்ள தொழில்துறையினர், கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த போட்டி நடப்பது மிகப் பொருத்தமானது என்று வரவேற்றுள்ளனர். சென்னையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பார்முலா-4 கார் பந்தயம் நடந்தது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடந்த இந்த பந்தயம் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ஆனால், அரசியலுக்காக சில அரசியல்வாதிகள் மட்டும் வழக்கம்போல கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம், இந்த கார் பந்தயத்திற்கு தொழிற்துறையினர் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ சென்னை என்றால் பெருமை கொள்பவர்கள் சொல்லும் காரணம், இங்கு அத்தனை ஆட்டோமொபைல் கம்பெனிகள் உள்ளன என்பதுதான். ஆட்டோமோபைல் துறையில் பல கம்பெனிகள் பல‌ விதமான ரேஸ்களில் கலந்து கொள்ள‌ தனித்தனியே அணிகளை வைத்துள்ளனர்.‌ ராலி, பார்முலா பந்தயங்கள், டிராக் ரேஸிங், மோட்டோகிராஸ், பைக் ரேஸிங் என‌ பலவிதமான பந்தயங்கள் உலகெங்கும் நடக்கின்றன. இந்த கம்பெனிகளின் சார்பாக பங்கேற்கும் டீம்கள், அவற்றில் முதலிடம் உள்பட பல வெற்றிகளை குவிப்பார்கள். ரேஸ்களில் வெற்றி பெற பல புதிய‌ கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்துவார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஸ்டியரிங் வீல்: 1894க்கு முன் காரில் ஸ்டியரிங் வீல் கிடையாது. அதுக்கு பதிலா ஒரு லீவர் இருக்கும். அதை பிடித்துதான் திருப்ப வேண்டும். ஆல்பிரட் வாசெரான் என்பவர் 1894ல் நடந்த பாரிஸ் ராலில ஸ்டியரிங் வீல் கொண்ட காரை ஓட்டினார். அவர் அந்த‌ பந்தயத்தில் வெல்லவில்லை. ஆனால்… அந்த ஸ்டியரிங் வீல் ஐடியா வென்றது. நமக்கு ஸ்டியரிங் வீல் கிடைத்தது.

டிஸ்க் பிரேக்: 1953ல் நடந்த ‘24 ஹவர்ஸ் ஆப் லீ மேன்ஸ் கிராண்ட் பிரீ’ பந்தயத்தில், ஜாகுவார் அணி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டிஸ்க் பிரேக் கார்களுடன் இறங்கியது. 1955ல் சிட்ரோயன் ரோடு கார்களுக்கு கொண்டு வந்தாங்க. இப்ப எல்லா கார்களிலும் இந்த பிரேக்குகள் தான். பேடில் ஷிப்டர்ஸ்: பத்தாண்டுகளுக்கு முன்பு ஹோண்டா சிட்டியில் ஆட்டோமேட்டிக் காரில் இருந்த பேடில் ஷிப்டர்ஸ் பேசு பொருளானது. இப்போது பல கார்களில் கிடைக்கிறது. இது 1989ல் ஃபெராரி அவர்களின் ரேசிங் காருக்கு கண்டுபிடித்தது. இப்போது பல கார்களில் உள்ளன. பெட்ரோல் கார்களில் டைரக்ட் ஃபியூவல் இன்ஜெக்சன்: கார்புரேட்டர் பயன்பாட்டில் இருந்த காலத்தில் 1954ல் மெர்சிடஸ்-பென்ஸ் F1 கார்களில் பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அவர்களின் ரோட் கார் 300SL கல்விங்குக்கு‌ வந்தது. போஷ் இந்த சிஸ்டம் சப்ளை‌ செய்தது. பிறகு இப்ப‌ோ எல்லா கார்களிலும் இருக்கிறது. டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்: போர்ஷே’ 80களில் அவர்களின் 962 ரேஸ் கார்ல சில மில்லி செகன்ட் நேரத்தை சேமிக்க அறிமுகப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட 2 மேனுவல் கியர்பாக்ஸ் மாதிரி அது வளர்ந்து இன்றைய டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆக‌ உள்ளது. டூயல் கிளட்ச் அடுத்த‌ பத்தாண்டுகளில் ரோடு‌ கார்களுக்கு வந்தது. முதலில் ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஆடி கார்களில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று பல கார்களில் உள்ளது. டூயல் ஓவர்ஹெட் கேம் (DOHC): இந்த இன்ஜின் டிசைன் ஜார்ஜஸ் பாய்லாட் என்பவரால் 1912ல் பிரெஞ்ச் கிராண்ட் பிரீ பந்தயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று கிட்டத்தட்ட எல்லா சாதாரண கார்களிலும் இதே‌ இன்ஜின் டிசைன்தான். கார்பன் பைபர் பாடீஸ்: மெக்லாரென் முதன்‌ முதலில் அறிமுகப்படுத்திய இது ரேஸ் கார்களின் எடையை அதன் வலிமை குன்றாமல் குறைத்து, வேகத்தை அதிகரிக்க உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது பல‌ கார்களில் பல இடங்களில் உபயோகிக்கின்றனர். பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களின் டேஷ்போர்டு‌‌ முதல் பல இடத்தில் உபயோகம்.

டிவிஎஸ், ஹீரோ மோட்டார்ஸ் கூட‌ ரேசிங்‌ டீம் வச்சிருக்காங்க. அவங்க ரேஸ்ல பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் பைக்ல இப்ப நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். கார், பைக் ரேஸ்கள் ஏதோ சும்மா நடத்தப்படுபவை அல்ல. அதில் இன்று பல காம்ப்ளக்ஸ் இன்ஜினியரிங் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பல புதுப்புது கண்டுபிடிப்புகள் வருகின்றன.‌ இந்த புதிய தொழில்நுட்பங்கள் ரேஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் நாம் உபயோகிக்கும் கார், பைக்குக்கு வருகிறது. சென்னையில் இத்தனை ஆட்டோமொபைல் கம்பெனிகள் இருக்கிறது என்றால் அவர்களுக்கு தேவையான மனிதவளம் இங்கே உள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் டிராக்குகள் 3ல் 2 தமிழ்நாட்டில் உள்ளது‌‌ (சென்னை மற்றும் கோவை). அப்படி என்றால், இந்திய ரேசிங் சீன்ல தமிழ்நாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என‌ புரிந்துகொள்ளலாம்.‌ 70’களில் சோழவரம் ரேஸ் மிக பிரசித்தி. அங்கிருந்து இப்போது இருங்காட்டுக்கோட்டை டிராக்கில் உலகளவில் திறமையான பந்தய வீரர்கள் உருவாகின்றனர்.‌ கோவையில் இன்னொரு‌ டிராக்கும் கிட்டத்தட்ட தயாராகி விட்டது.

இந்தியாவில் உலகின் பல ஆட்டோமொபைல் கம்பெனிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள் சென்னையில் தான் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட ஊரில் அரசு சிறிய அளவில் பார்முலா 4 ஸ்ட்ரீட் டிராக் பந்தயத்தை நகரின் சாலையில் நடத்த முற்படும்போது அதை எதிர்ப்பது என்பது, அரசை எதிர்ப்பது அல்ல… நம் மக்களின் வேலை வாய்ப்பை, புதியவற்றை கண்டுபிடிக்கும் திறனை, மனித வளத்தை, தொழில் முன்னேற்றத்தை எதிர்க்கும் செயல். இதை எதிர்ப்பவர்கள் தற்சார்பு என மாடு மேய்க்க சொல்பவர்கள், நன்கு படித்தவர்கள் கூட ஏமாந்து இப்படி இவர்கள் பின்னால் செல்வது வேதனை. சிங்கப்பூர் நைட்‌ரேஸ் மற்றும் மொனாகோவின் பார்முலா 1 உலகப்புகழ் பந்தயம் பற்றி தேடிப்பார்த்தால் ஓரளவுக்கு புரியும். யாராவது அஜர்பைஜானின் பார்முலா 1 ரேஸுக்கு‌ பிறகு ஏன்‌ நம்மூர்‌ சினிமா ஆட்கள் முதல் பலரும் அங்கு ஷூட்டிங் போகிறார்கள் என யோசித்தால் கார் பந்தயங்கள் எந்த அளவுக்கு சுற்றுலாவை மேம்படுத்துகின்றன என்பது புரிந்துவிடும். அதன்‌ மூலம் நீண்டகால வருவாய் ஈட்டும் முயற்சிகள் பல நடக்கின்றன என்றும் தெரியும். இப்போது சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது 4ம் வரிசை சாதாரண பார்முலா 4 ரேஸ்கள். இனி வரும் காலங்களில் பார்முலா 1 ஸ்ட்ரீட் டிராக்காக சென்னை வர வேண்டும் என கனவு காண வேண்டும்‌ நாம். எதிர்ப்பவர்கள் குரைத்துக்கொண்டே இருக்கட்டும்… நாம் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டத்துக்கு நகர்வோம் என்கின்றனர் தொழில் துறையினர்.

 

The post எதிர்காலத்தில் பார்முலா 1 ஸ்ட்ரீட் டிராக்காக சென்னை வர வேண்டும் சுற்றுலா பெருகும் என தொழில்துறையினர் வரவேற்பு: ‘எதிர்ப்பு குரல்களை அலட்சியப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’ appeared first on Dinakaran.

Tags : Formula 1 ,Chennai ,Formula Car ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...