நன்றி குங்குமம் தோழி
சாதனைகளுக்கு வயது ஒரு தடையில்லை. அந்த வாக்கியத்தை உறுதி செய்துள்ளார் ஐந்து வயது சிறுமியான இம்மாகுலேட் டெபோரா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி அதிக தூரம் சைக்கிள் ஓட்டி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தேர்வாகியுள்ளார். இதுவரை மூன்று சாதனைகளை செய்திருக்கும் இம்மாகுலேட் தற்போது 1.32 நிமிடங்களில் 5.49 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவரிடம் பேசிய போது…
‘‘சொந்த ஊரு சென்னைதான். நான் தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் நல்ல திறமையானவர். அவரும் பலவிதமான துறைகளில் கின்னஸ் சாதனைகளை செய்திருக்கார். அதனால் எனக்கும் அவரை போலவே சாதனைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவரைப் போல் பல சாதனைகள் இல்லாமல் ஒன்றாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருந்தது.
அதனால் நான் அம்மா, அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன். ‘நானும் அண்ணனைப் போல் ஏதாவது சாதனை செய்வேன்’ என்று. நான் சொல்வதைக் கேட்டு என் பெற்றோர் என்னை தற்காப்புக் கலைக்கான பயிற்சியில் சேர்த்துவிட்டார்கள். அங்குதான் குங்பூ மற்றும் யோகா இரண்டையும் கற்றுக் கொண்டேன். பயிற்சி எடுக்க ஆரம்பித்த பிறகு எனக்கு யோகாவின் மீது ஆர்வம் அதிகமானது. அதனால் யோகாவில் இருக்கும் பலவிதமான விஷயங்களையும் ஒவ்வொன்றாக நான் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.
தொடர்ந்து பல ஆசனங்கள் மற்றும் யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டிருந்த போது இதில் ஏதாவது சாதனை செய்யலாம் என்று தோன்றியது. அது குறித்து என் பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் நான் சின்னப் பெண் ஏதோ சொல்கிறேன் என்று இல்லாமல், என்னை அதற்காக உற்சாகப்படுத்தினார்கள். ‘குறைந்த நேரத்தில் அதிகமான யோகாசனங்களை செய்தால் நீயும் ஒரு சாதனையாளர் ஆகலாம்’ என்றார்கள். எனக்கும் அவர்கள் சொன்ன விஷயத்தை செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கண்டிப்பாக அவர்கள் சொன்னதில் சாதனை செய்ய வேண்டும் என்று எனக்கு ஆர்வம் ஏற்பட பல்வேறு வகையான யோகாசனங்களை செய்யத் தொடங்கினேன். 20 வகையான யோகாசனங்களை 40 நொடிகளில் செய்து காட்டினேன்.
நான் செய்தது புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ஒரு சாதனையாக பதிவானது. இந்த சாதனை என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. அதனால் தொடர்ந்து சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது’’ என்றவர், அவரின் தற்போதைய சாதனையான குறைந்த நேரத்தில் அதிக தூரம் சைக்கிள் ஓட்டியது குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘எல்லா குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் முதலில் வாங்கித் தரும் வாகனம் சைக்கிளாகத்தான் இருக்கும். எனக்கும் எங்க வீட்டில் அதை வாங்கிக் கொடுத்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் அதை ஓட்ட பழகிக் கொண்டேன். ஆரம்பத்தில் பேலன்ஸ் செய்ய பயமாக இருந்தது. ஆனால் ஓட்ட ஓட்ட எனக்கு அது ரொம்பவே பிடித்துப் போனது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் அதிக நேரம் சைக்கிள் ஓட்ட துவங்கினேன்.
நான் அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து மறுபடியும் எங்க வீட்டில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் சைக்கிள் ஓட்டுவதில் சாதனை செய்யலாமே என்றார்கள். நானும் என் பாட்டியின் வீட்டின் மேல் மொட்டை மாடியில் சைக்கிள் ஓட்டிப் பழகினேன். மொட்டை மாடியில் நீண்ட சாலை இல்லை என்றாலும், நான் அதில் கடக்கும் தூரம் மற்றும் நேரத்தினை ஒரு ஆப் மூலம் கணக்கிட்டோம். அதில் 1.32 நிமிடங்களில் 5.49 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாமல் நான் ஓட்டி அதனை சாதனைக்காக பதிவு செய்தேன். அந்த சாதனை புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அண்ணனைப் போல் சாதனை செய்ய வேண்டும் என்றுதான் ஒரு சாதனை செய்தேன்.
ஆனால் மீண்டும் ஒரு சாதனை செய்வேன் என்று நான் நினைக்கவில்லை. அது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இரண்டு சாதனைகளை தொடர்ந்து பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது’’ என்று தன்னம்பிக்கையோடு பேசிய இம்மாகுலேட் டெபோராவை தொடர்ந்தார் அவரின் அன்னை சங்கீதா மேரி. ‘‘டெபோராவுக்கு சின்ன வயசில் இருந்தே ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு விஷயம் என்றாலும் அதை மிகவும் ஆர்வமாக செய்வார். இயல்பாகவே அவர் மிகவும் துறுதுறுவென்று இருப்பார். மேலும் அவருக்கு ஸ்டாமினா அதிகமாக இருந்ததால், அவரை தற்காப்பு மற்றும் யோகாசனப் பயிற்சியில் சேர்த்துவிட்டோம். இவர் வயதில் உள்ள குழந்தைகளை விட இவர் கொஞ்சம் மெச்சூராக பேசுவார்.
பாடங்களையும் கூட ஒரு தடவை படித்தாலே அதை அப்படியே புரிந்து கொண்டு எழுதிவிடுவார். அதனால் அவர் சாதனை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது. அதனால் அவரை ஊக்கப்படுத்த ஆரம்பித்தோம். இதுவரை மூன்று சாதனைகளை செய்திருக்கிறார். எல்லாமே அவள் விருப்பப்பட்டு செய்தவைதான். டெபோராவின் அண்ணணும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார். அவரைப் பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் அண்ணனைப் போல் சாதனைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு நாங்க ஆதரவு கொடுத்தோம். தற்போது கண்ணை கட்டிக் கொண்டு குறைந்த நேரத்தில் செஸ் போர்டில் இருக்கும் காயின்களை சரியாக அடுக்கும் சாதனையில் ஈடுபட்டு வருகிறார்’’ என்கிறார் சங்கீதா மேரி.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post குறைந்த நேரத்தில் அதிக தூரம் சைக்கிள் ஓட்டிய சாதனை சிறுமி! appeared first on Dinakaran.