×
Saravana Stores

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்; வரும் 7ம்தேதி வரை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜூலை முதல் வாரம் வரை வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவில் குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசி, குமரி, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இன்றும் ஒருசில இடங்களில் லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் வரும் 7ம்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 7ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் 5ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசும் என்று தெரிவித்துள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோன்று, வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்; வரும் 7ம்தேதி வரை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,7TH ,Meteorological Survey Center ,Chennai ,India ,South India ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12...