சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கோவிலூரில் அமைந்துள்ளது கொற்றவாளீஸ்வரர் ஆலயம். இது வீரசேகர பாண்டியன் என்ற மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு காலத்தில் வன்னி மரங்கள் நிறைந்த காடாக இந்தப் பகுதி இருந்ததால் ஆலயத்தின் தலவிருட்சமும் வன்னி மரமாகவே திகழ்கிறது.
புராணக் கதை என்ன?
திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். அந்தப் பகுதியில், அற்புதமான வரமருளும் தெய்வமாக காளீஸ்வரர் துலங்கினார். பெயருக்கேற்றாற்போல நல்லோருக்கு எதிரான பகைவரை அழித்து நன்மை அருளக்கூடியவர் அவர். இந்த வகையில் தன் நாட்டின் மீது படையெடுக்கும் பகைவர்கள் மீதோ அல்லது தன் எல்லை கடந்து அத்து மீறும் அண்டை நாட்டு அரசர்கள் மீதோ இவன் போர் தொடுக்கப் போகும்போதெல்லாம் இந்தக் காளீஸ்வரரைப் பிரார்த்தனை செய்துகொள்வான், அவர் அருளால் வெற்றியும் காண்பான்.
அதர்மத்துக்கு எதிரான போர் என்பதால் காளீஸ்வரர் அவனுக்கு வெற்றிகளை அருளியதோடு, அவனுக்கு தெய்வாம்சம் பொருந்திய வாள் ஒன்றும் கிடைக்கச்செய்தார். அந்த வாள் கிட்டிய வுடன் இவனை நெருங்கவே பகைவர்களும், அநியாயம் புரிந்தவர்களும் தயங்கினார்கள், புறமுதுகிட்டு ஓடிப் போனார்கள். அந்த வாளுக்கு ‘கொற்றவாள்’ என்று பெயரிட்டு, புனிதம் மிகுந்ததாகப் போற்றிப் பாதுகாத்துவந்தான் மன்னன். ஆனால், நாளாவட்டத்தில் அவனுக்கு அந்த வாளைவிட தன் சொந்த பலம்தான் அதுவரை தான் பெற்றிருந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்ற கர்வம் தலைதூக்கியது.
வீரபாண்டியன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது அவன் மனதில் படர்ந்திருந்த தற்பெருமை என்ற தீயை அணைத்து அவனுக்கு நற்புத்தி புகட்ட ஈசன் கருதினார் போலிருக்கிறது. திருவிளையாடல் ஆரம்பமாயிற்று. காட்டில், மன்னன் ஒரு மானைப் பார்த்தான். ராமாயண சீதை பார்த்தது போன்ற அதே பேரழகு மாயமான் அவன்முன் மெல்லத் தளர்நடை பயின்றது. உடனே அதைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளும் ஆவலில் அதைத் துரத்தினான். அப்போது வழியில் ஒரு புலியும், ஓர் அந்தணரும் குறுக்கிட்டார்கள். புலிக்குப் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்தணரைப் பார்த்ததும் மானை மறந்த மன்னன், அவரைக் காப்பாற்றத் திரும்பினான். அப்போதுதான், தன் கொற்றவாள், மானைத் துரத்தியபோது எங்கோ விழுந்துவிட்டதை உணர்ந்தான். ஆனாலும் அந்தணரைக் காக்கும் எண்ணத்துடன் புலி மீது பாய்ந்து அதைத் தாக்க முற்பட, பளிச்சென்று அந்த புலியோடு, அந்தணரும் மறைந்தார். அருகேயிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் ஒன்று காட்சி தந்தது. அந்த லிங்கத்துக்கு முன்னால் மாயமாகிப் போன மன்னனின் கொற்றவாள்!
அரனின் விளையாடலை மன்னன் புரிந்துகொண்டான், தன் ஆணவத்தை விட்டொழித்தான். மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ‘ராஜகட்க பரமேஸ்வரர்’ என்று இறைவனுக்குப் பெயரிட்டான். தனக்கு அந்த வாள் மூலமாகப் புத்தி தெளிவித்ததால் இறைவனை ‘கொற்றவாளீஸ்வரர்’ என்றும் அழைத்தான். முப்புரமும் எரித்தவர் என்பதால் பின்னாளில் இவரை திரிபுவனேஸ்வரர் என்றும் அழைத்து மக்கள் வழிபட்டார்கள்.
எளிமையான லிங்க வடிவம். பாணத்தில் சந்திரன் ஒரு கண்ணாகவும், ஆதவன் மறு கண்ணாகவும், அன்றலர்ந்த மலர், நாசியாகவும் திகழ, ஈசன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் புரிவது போன்ற கோலத்தில் அர்ச்சகரால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கோயிலின் நாயகி, நெல்காத்த அம்மன். இந்தப் பெயருக்கான காரணம் என்ன?
சிவபக்தரான சிவகுப்தன்-சுதன்மை தம்பதியரின் மகள் அரதனவல்லி. தங்கள் வயல் அறுவடைக்குத் தயாராகி விட்டதால் அதைக் காவல் காக்க மகளை அனுப்பினாள் சுதன்மை. விளையாட்டுச் சிறுமியான அரதனவல்லி வயலுக்குப் போவதாகப் போக்குக் காட்டிவிட்டு, அவளுக்கு மிகவும் பிடித்த, அருகிலிருந்த மலர்ச்சோலைக்குச் சென்றுவிட்டாள்.
மதிய நேரத்தில் மகள் பசித்திருப்பாளே என்ற கவலையில் சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, பொறுப்புணர்வுடன் காவல் காத்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்துப் பெருமிதம் கொண்டாள். அவளை அழைத்து, தலையை வருடி, சோறு ஊட்டினாள். மகளும் மிக மகிழ்ந்து, ருசித்து உண்டாள்.
பிறகு, மகளுக்குப் பசியாற்றிய நிறைவில் வீடு திரும்பினாள் சுதன்மை. சிறிது நேரத்துக்குள் அரதனவல்லி வீட்டிற்கு வந்து, ‘அம்மா! பசிக்கிறது, சோறு போடு,’ என்றாள். அவளைக் குழப்பத்துடன் பார்த்த சுதன்மை, தொடர்ந்து விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்து பரவசமானாள். அறுவடை நெல்லைக் காத்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்காத்த அம்மன் என்று பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் சாலிவாலீஸ்வரி. தன் மகளாக வந்த அம்மனுக்கு சுதன்மை தயிர்சாதம் ஊட்டியதால் இன்றளவும் உச்சிகாலத்தில் இந்த அம்மனுக்கு தயிர்சாதம் நிவேதனமாக சமர்ப்பிக்கப்படுகிறது.
கையில் தாமரைமலர் ஏந்தி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி அளிக்கும் அன்னையின் திருமுகத்தில் துலங்கும் தெய்வீகப் புன்னகை, பக்திப் பரவசமூட்டுகிறது. சந்நதியை விட்டு நகர மனமும், கால்களும் மறுப்பது உண்மை. அத்தனை பேரழகுச் சிற்பமாய்த் திகழ்கிறாள் அன்னை.
இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள், பெண் குழந்தைகள் என அனைத்திற்கும் பாதுகாவலாகத் துணைநிற்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அர்த்தமண்டபத்தில் ரிஷபம் மேளம் தட்ட, சிவன் நடனமாடுவது சிற்பமாக வடித்தெடுக்கப்பட்டுள்ளது. துர்க்கை நடனமாடும் சிற்பமும் வெகு அழகாகத் துலங்குகிறது. இன்னொரு சிற்பத்தில் நின்ற நிலையில் வீணை ஏந்திய சரஸ்வதி. அவளது தலையலங்காரம், வீணையில் இருக்கும் வேலைப்பாடுகள், புடவையில் தெரியும் மடிப்புகள், இடுப்பை ஒயிலாக வளைத்து கால்களைச் சற்றே அகற்றி நடன பாவம் காட்டும் தோரணை, ஆறு கரங்களும் அவற்றில் சாமரமும், மணியும் இன்ன பிற பூசனைப் பொருட்களும் அமைந்திருக்கும் விதம் அனைத்துமே சிற்பத்தைக் கண் கொட்டாமல் காண வைக்கின்றன.
பொதுவாகவே ஆலயங்களில் நவகிரகங்கள் நின்ற நிலையில் காட்சி தருவது வழக்கம். ஆனால் இங்கு நவகிரகங்கள் அதிசயமாக அமர்ந்த நிலையில் திருத்தமான, சின்னச் சின்னச் சிங்காரச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
மரம், கல், ஐம்பொன் ஆகியவற்றில் சிற்பங்கள் வடிக்கும் கலை இந்த ஆலயத்தில் கற்பிக்கப்படுகிறது. அந்தக் கலையைக் கற்பிப்பதற்கு இந்தக் கோயில் தகுதி பெற்றதுதான் என்பதைப் பறை சாற்றுகிறது அர்த்த மண்டபத்துத் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சிற்பங்கள். இந்த சிற்பங்களைப் பார்த்து பிரமிக்கவே இந்தக் கோயிலுக்கு வரலாம். இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் பல்வேறு கோணங்களில் நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கும் கலை ரசிகர்களையும் காணமுடிகிறது.
பிற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த ஆண்டவர் சுவாமிகள் கோயில் திருப்பணிகளைத் திறம்படச் செய்து இன்று நாம் காணும் ஆலயத்தை அமைத்திருக்கிறார். அவரை நினைவு கூரும் வண்ணம் அவர் பரமேஸ்வரனைப் பணிந்து வணங்குவது போன்றதொரு அழகிய சிற்பம் இங்கே காணப்படுகிறது. கையில் பற்றியிருக்கும் ருத்ராட்ச மாலை, மடிப்புகளுடன் கூடிய தலைப்பாகை, உச்சி முதல் பாதம் வரையிலான அச்சு அசல் நேர்த்தி எல்லாம்
பிரமிக்க வைக்கின்றன.
கோயில் முன்புறத்தில் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளம் வெளிப்புறமாக ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டிருக்கிறது.
கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்க தேசிகர். இவரே கொற்றவாளீஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பர தேசிகரின் காலத்தில், கோவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.
வேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.
காலை 7 முதல் 11 மணிவரை; மாலை 4 முதல் இரவு 8 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
கோவில் முகவரி: அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், சிவகங்கை – 630307. தொலைபேசி: 94892 78792; 94424 39473; 90435 67074
The post கொற்றவனுக்கு அருளிய கொற்றவாளீஸ்வரர் appeared first on Dinakaran.