×

நாகப்பட்டினம் கடற்கரையில் சிவபெருமானுக்கு தங்கமீன் அளித்த அதிபத்தநாயனார்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடற்கரையில் சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்க மீன் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களில் ஒருவர் அதிபத்தநாயனார். இவர் சென்னை கடற்கரையில் இருந்து குமரி கடற்கரை வரை உள்ள 64 மீனவ கிராமங்களில் உள்ள நாகப்பட்டினம் நுழைப்பாடி எனும் நம்பியார் நகரில் அவதரித்தவர். சிவபெருமானின் தீவிர பக்தர். இதனால் அதிபத்தநாயனார் தினந்தோறும் கடலுக்கு சென்று, தான் பிடிக்கும் மீன்களில் முதல் பெரிய மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.

இந்நிலையில் ஒரு நாள் அதிபத்தநாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல் பிடிபட்ட ஒரு மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தநாயனார், மனம் தளராமல் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், ஒரு நாள் அதிபத்தநாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார்.

இந்த வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்தநாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். அவரது பக்தியில் மயங்கிய சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர தினத்தில் நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெறும். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். ஆனால் கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம் நேற்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து மேளம், தாளம், வாண வேட்டுகள் முழங்க புறப்பட்டு நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரை வந்தது. அதிபத்தநாயனார் வணங்கிய அமுதீசர் கோயில்களில் இருந்து ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்கள் சீர்வரிசைகளும் நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரை வந்தது.
பின்னர் அங்கு சீர்வரிசை தட்டுக்களை வைத்து சிறப்பு தீபராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து அதிபத்தநாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தங்கமீன்களை கடல்நீரில் விட்டு சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post நாகப்பட்டினம் கடற்கரையில் சிவபெருமானுக்கு தங்கமீன் அளித்த அதிபத்தநாயனார்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Adhipathanayanar ,Lord Shiva ,Nagapattinam beach ,Nagapattinam ,Atipadhanayanar ,Adhipathanaya ,Chennai beach ,Kumari beach ,Dinakaran ,
× RELATED சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?