சென்னை: சென்னையை அடுத்த பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் கைதானவர்களில், ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது
சென்னையை அடுத்த பொத்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் அருகே உள்ள பொத்தேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காவனூர், கோனாதி, காட்டாங்கொளத்தூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் மாணவ-மாணவிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி இரவு நேரங்களில் கஞ்சா புகைத்துவிட்டு குடியிருப்புகள் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் ஆபாசமான முறையில் சுற்றி வருவதாகவும் தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து அதிரடியாக 1,000 போலீசார் நேற்று காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள 500 வீடுகளில் நுழைந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மாணவர்கள் வைத்திருந்த 1/2 கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்கும் கருவிகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து 19 மாணவர்கள் மற்றும் 2 பேர் என 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் மகேஷ்குமார், சுனில் குமார், டப்லு ஆகிய 3 பேரை 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் கைதானவர்களில் ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சென்னையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை ஜாமினில் விடுவித்து செங்கல்பட்டு நீதிமன்ற விடுவிப்பு appeared first on Dinakaran.