சென்னை: தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவைத்துள்ளார்.
மேலும் வெளியான அறிக்கையில்; “பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் 23.11.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள எதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம். நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
மேலும், 23.11.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும்.
கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி “Namma Grama Sabhai Mobile App” மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை 23.11.202 அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நவ.1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.