×
Saravana Stores

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவக்கம்

 

மேட்டுப்பாளையம், செப்.1: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடந்த ஆக.1ம் தேதியன்று அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறாங்கற்கள், மண் சரிந்து தண்டவாளம் சேதமடைந்தது. சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும் கனமழை எச்சரிக்கையாலும் அன்றைய தினம் முதல் நேற்று (ஆக.31) வரை மலை ரயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இடையில் ஓரிரு தினங்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தண்டவாள பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதன் காரணமாக செப்.1 (இன்று) முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் சேவை துவங்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam-Ooty Hill Railway ,Mettupalayam ,Ooty ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,Andhra Pradesh ,UNESCO ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...