×

அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடை சட்டமாக்கிய பெருமை கலைஞரையே சாரும்: பாலகிருஷ்ணன் பேச்சு

திண்டுக்கல்: அருந்ததிய மக்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு தயாராக இல்லை என திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அருந்ததிய மக்களுக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அருந்ததிய அமைப்புகள் சார்பாக சிறப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே சாதிய கணக்கெடுப்பு நடந்தது. பிறகு ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள்? அந்த கணக்கெடுப்பை இப்போதாவது வெளியிடலாமே? பாஜகவின் நோக்கம் என்னவென்றால் இந்த தீர்ப்பை எதிர்க்க முடியாது. இந்த தீர்ப்பை அமலாக்க ஒன்றிய பாஜ அரசு தயாராக இல்லை. உச்சநீதிமன்றமே ஒரு தீர்ப்பை வழங்கிவிட்ட பிறகு முடக்குவது, கிடைத்த அந்த சலுகையை தட்டி பறிக்க நினைப்பது பொருத்தமாக இருக்காது. ஏழை விவசாயி, தொழிலாளி கையில் என்றைக்கு நிலம் கிடைக்கிறதோ அன்றைக்கு தான் இந்திய சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

நாங்கள் கோரிக்கை வைத்து போராடினாலும், அதை ஏற்று சட்டமாக்கிய பெருமை கலைஞருக்கு உண்டு. இதற்காக ஜனார்த்தன் கமிட்டியை அமைத்தார். தமிழ்நாட்டில் இந்த இடஒதுக்கீடு அமலாக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் ஜனார்த்தனம் கமிட்டியின் ரோஸ்ட்டர் முறை தான். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியை தழுவிவிட கூடாது என்பதற்காக உச்சநீதிமன்ற வழக்கறிஞராக வில்சன் போன்றவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்ததன் மூலம் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த உள்ஒதுக்கீட்டின் முழுமையான பலன்கள் அருந்ததிய மக்களுக்கு கிடைக்க தேவையான சட்ட முன் வடிவுகளை ஆலோசிக்க வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன். கலைஞர் கொண்டு வந்த இந்த சட்டம், நிறைவேறும்போது தான் அது முழுமையடையும். இவ்வாறு பேசினார்.

The post அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடை சட்டமாக்கிய பெருமை கலைஞரையே சாரும்: பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Balakrishnan ,Dindigul ,Union Government ,Supreme Court ,Tamil Nadu Assembly ,
× RELATED மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு...