×
Saravana Stores

இரண்டாம் வெண்மை புரட்சி ஏற்படுத்த மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி

* 1962 கட்டணமில்லா தொலைபேசி

* அவசர சிகிச்சைக்கு அழைக்கலாம்

தஞ்சாவூர் : இரண்டாம் வெண்மை புரட்சி ஏற்படுத்த மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.1962 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அவசர சிகிச்சைக்கு அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், \”இரண்டாம் வெண்மை புரட்சியை\” ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை, ஒரு பிரதம மருத்துவமனை 7 கால்நடை மருத்துவமனை 105 கால்நடை மருந்தகங்கள் 3 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் 28 கால்நடை கிளை நிலையங்கள் செம்மையாக செயல்படுகிறது.தற்போது கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலை தூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 200 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பயன்படுத்தி நடமாடும் கால்நடை மருந்தகம் செயல்பட தமிழக முதல்வரால் 20.8.2024 அன்று இரு சேவைப் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட ஒன்றியப் பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் விதமாக தஞ்சாவூர் பன்முக மருத்துவமனை, கும்பகோணம் கால்நடை பெருமருத்துவமனை, பட்டுக்கோட்டை. கால்நடை மருத்துவமனையினை தலைமையிடமாக கொண்டு இவ்வாகனங்கள் செயல்படும்.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ வாகனங்கள் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படும். பிற்பகலில் கால் சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை உள்ளடக்கிய முகாம்கள் மேற்கொள்ளவும் பிற்பகல் 5 மணி வரை உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தரவேண்டும்.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் பங்கேற்று செயல்படுத்தப்படும்இந்த வாகனங்களில் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், செயற்கைமுறை கருவூட்டல் பணிக்கு தேவையான திரவ நைட்ரஜன் குடுவை, உறைவிந்து குச்சிகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவைகளை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைக்கான மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post இரண்டாம் வெண்மை புரட்சி ஏற்படுத்த மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி appeared first on Dinakaran.

Tags : revolution ,Thanjavur ,free ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா