சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன் மொழிப்பட்ட தீர்மானம் கம்யூனிஸ்ட், விசிக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தூய்மை பணி செய்ய தனியாருக்கு ஒப்பந்தத்தை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மொத்த 54 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அப்போது தீர்மானம் எண் 30, 37, 38 மற்றும் 39 ஆகியவற்றுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில், தீர்மானம் எண்-30ல், அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் போதுமான மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் புதிதாக அறிவிக்கப்பட்ட கொளத்தூர் வட்டத்திற்கான வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக செயல்படுவதற்கும், இந்த பள்ளியில் உள்ள மாணவர்களை பாலவாயல் உயர்நிலைப் பள்ளியில் இணைப்பதற்கும் மாமன்ற ஒப்புதல் கேட்டு தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக தான் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். கட்டிடப் பணி முடிந்ததும் மாணவர்கள் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் எண்-30ஐ நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில், உர்பேசர் சுமித் நிறுவனத்திற்கு திடக்கழிவு மேலாண்மை செய்ய ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட மண்டலங்களில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு குப்பை சேகரித்தல் மற்றும் எடுத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், மண்டலம் 4 மற்றும் 8 ஆகியவற்றில் திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கவும் தீர்மானம் எண் 37,38 மற்றும் 39 மாமன்றத்தில் முன்மொழியப்பட்டது. இதற்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது என்று மேயர் கூறினார். அதோடு, தீர்மானத்தை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். ஆமோதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மேயர் அறிவித்தார். இதையடுத்து, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
The post கம்யூனிஸ்ட், விசிக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் தீர்மானம் நிறுத்தி வைப்பு தூய்மை பணிக்கு தனியார் ஒப்பந்தம் கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.