×

விநாயகர் சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்ட கோவளம் கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. அடுத்து வருகிற நாட்களில் படிப்படியாக இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

தாம்பரம் காவல் ஆணையத்தின் எல்லையில் அடங்கிய மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, சேலையூர், கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் வைக்கபடும் சிலைகள் கோவளம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட உள்ளதால் இந்த இடத்தை ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சிலைகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வரும் வழி, சிலைகளை இறக்கிவிட்டு வாகனங்கள் வெளியே செல்லும் வழி, சிலைகளை கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிச்செல்ல ஒதுக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

பின்னர், கலெக்டர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித பிரச்னைகளும் இன்றி சுமுகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலைகளை கரைத்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இன்றி எடுத்து வந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து அவர்களின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மதித்து சிலைகளை கரைக்க வேண்டும்.

இதற்கு தேவையான காவல்துறை பாதுகாப்பு போட உள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படாது. ஆகவே பொதுமக்களும், அமைப்புகளும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு அளித்து அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியே மட்டும் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தாம்பரம் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார், தாம்பரம் துணை ஆணையர் (போக்குவரத்து) சமய் சிங் மீனா, பள்ளிக்கரணை உதவி ஆணையர் கார்த்திகேயன், கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post விநாயகர் சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்ட கோவளம் கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kowalam beach ,THIRUPORUR ,CHENGALPATTU ,ARUNRAJ ,VINAYAGAR ,KOVALAM BEACH ,Vinayagar Chaturthi Festival ,Tamil Nadu ,Cowal beach ,
× RELATED செங்கல்பட்டு அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி