×

இதயம் வரை 25 செ.மீ பரவி இருந்த அரியவகை விதைப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை: ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை சாதனை

சென்னை: இதயம் வரை 25 செ.மீ பரவி இருந்த அரியவகை விதைப்பை புற்றுநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை அளித்து ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் புற்றுநோயை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க புதிய கருவிகள், மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, புற்று நோய் சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை விஞ்சும் அளவிற்கு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

புற்றுநோய்க்கு கீமோதெரபி, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை என மூன்று வகை சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 3 வகை சிகிச்சைக்கும் தனிதனியாக துறைகளை கொண்டு ஓமந்தூரார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் இயங்கி வருகிறது. தினமும் 200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அரிய வகையான விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவம் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது.

பீகாரை சேர்ந்த 28 வயதான சிவம், தியாகராயநகரில் பணிபுரிந்து வருகிறார். இவர் வலது விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அது போதிய அளவு பலன் அளிக்காத நிலையில் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு முன்னேறிய பரிசோதனைகள் (Advance check-up) செய்யப்பட்டது. அதில் அவருடைய விதைப்பை புற்றுநோய் விதைப்பையில் இருந்து இதயத்திற்கு செல்லும் தமனியில் பரவி இதயம் வரை புற்றுநோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் தலைமையில் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் சர்மா, வாஸ்குலர் சர்ஜன் கிருஷ்ணா, மயக்க மருந்து நிபுணர் தீப்தி உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு விதைப்பையுடன் தமனி முழுவதும் (25 செ.மீ) அகற்றப்பட்டு செயற்கை தமனி பொருத்தப்பட்டது.

இதுதொடர்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் கூறியதாவது: நோயாளி சிவத்தின் விதைப்பையுடன் தமனி முழுவதும் புற்றுநோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுளோம். இதற்காக அவரை 3 வாரம் தொடர்ந்து கண்காணித்தோம். பிறகு பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்கள் சேர்ந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தோம். இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது, இதயத்தை நிறுத்தி வைத்த பிறகே செய்யப்படும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யாமல் முறையாக திட்டமிட்டு செய்தோம். சிகிச்சை முடிந்த 2 வாரத்தில் நோயாளி முழு குணமடைந்தார். 3 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்காக வர சொல்லி அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும்
ஓமந்தூரார் மருத்துவமனை இயக்குனர் மணி கூறியதாவது: ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு அதிநவீன இயந்திரம் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது ரூ.25 லட்சம் செலவு ஆகும். ஆனால் இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த திட்டம் மூலம் அதிகம் பயன்பெற்ற மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் துறை முதல் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

The post இதயம் வரை 25 செ.மீ பரவி இருந்த அரியவகை விதைப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை: ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Omanturar Multidisciplinary Hospital ,CHENNAI ,Omanturar Multipurpose Government Hospital ,Tamil Nadu ,Omanturar Multipurpose Hospital ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...