கிரகணத்தின் போது உணவு பாத்திரங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றில் தர்ப்பை எனும் புல்லை கிள்ளிப் போடுகிறார்கள். தர்ப்பை புல்லின் இதுபோன்ற விசேஷ சக்திகளைப் பற்றி தெளிவாகக் கூறுங்கள். – கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.
தர்ப்பை என்பது புனிதத்தன்மை அளிக்கக்கூடியது. அசுத்தத்தை நீக்குவதோடு மட்டுமல்லாது மந்திரத்தினுடைய சக்தியை உள்ளிழுத்துக் கொள்ளும் திறன் கொண்டது. மேலும் நம் உடலிற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து நம்மைக் காக்கும் திறன் கொண்டது தர்ப்பைப்புல் என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக் கொள்கிறார்கள். எனவேதான் கிரஹண காலத்தில் நம் வீடுகளில் தண்ணீர், மாவு உள்பட அனைத்து பாத்திரங்களிலும் நம் முன்னோர்கள் தர்ப்பையைப் போட்டு வைத்தார்கள். எல்லா சடங்குகளிலும் தர்ப்பையை உபயோகப்படுத்துகிறார்கள். பூஜையின்போது தர்ப்பையால் செய்த பாய்தனை ஆசனமாகப் போட்டு அதன் மேல் அமர்ந்துகொண்டு பூஜை செய்கிறார்கள்.
இது மட்டுமல்லாது தர்ப்பையானது ஒரு சிறந்த ரிசீவரும்கூட (receiver). இந்து மத சடங்குகளில் கலசம் வைக்கும்போது அதில் தர்ப்பையால் செய்யப்பட்ட கூர்ச்சத்தினையும் வைத்திருப்பதைக் காண முடியும். இந்த கூர்ச்சம் ஆனது ஒரு ஏரியல் டவர் (Ariel Tower) போல செயல்பட்டு வெளியில் உச்சரிக்கும் மந்திரத்தின் சக்தியை உள்ளிழுத்து கலசத்திற்குள் இருக்கும் நீருக்குள் கொண்டு சேர்க்கிறது. ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின்போதுகூட யாகசாலை மேடையில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்களில் இருந்து மேலே உள்ள விமானக் கலசம் முதல் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிலைபிம்பம் வரை தர்ப்பைக் கயிற்றினால் இணைத்திருப்பார்கள்.
யாகசாலையில் செய்யப்படும் யாகாதி கிரியைகளின் பலன் ஆனது தர்ப்பைக்கயிற்றின் வழியாக மூலஸ்தானத்திற்குள் இருக்கும் சிலையிடம் சேர்ந்து அதன் சாந்நித்தியைக் கூட்டுகிறது. சிறப்பு பூஜைகள் முதல் முன்னோர் வழிபாடு வரை தர்ப்பையால் செய்த பவித்திரத்தினை மோதிர விரலில் அணிந்துகொண்டு செய்கிறோம். பவித்திரம் என்றால் புனிதமானது என்று பொருள். மோதிர விரலில் பவித்திரத்தை அணியும்போது ரத்த ஓட்டம் சீரடை கிறது. நமது மனமும் சிந்தனைச் சிதறல் ஏதும் இன்றி செய்யும் சடங்குகளில் ஒன்றுகிறது. தர்ப்பைப் புல்லின் மகத்துவத்தை அனுபவித்துத்தான் உணர இயலுமே அன்றி வார்த்தையில் சொல்லி மாளாது.
?சுகப்பிரசவம் ஏற்பட என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?
– ஜெயச்சந்திரன், புதுச்சேரி.
“ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விஸல்யா கர்ப்பிணி பவேத்’’
இமயமலையின் வடக்கே இருக்கும் யட்சினியான ஸுரதா தேவியே, உன்னை வணங்குகிறேன். தாயும் குழந்தையும் எவ்வித ஆபத்துமின்றி சுகப்பிரசவம் ஆக அருள் புரிவாயாக என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். இதை பிரசவ வலி கண்டது முதல் நிறுத்தாமல் மனசுக்குள் ஜபித்தால், சுரதாதேவி சுகப்பிரசவம் நடக்க உதவுவாள் என்று நம்பிக்கை. திருச்சி மலைக் கோட்டை தாயுமானவ சுவாமியையும் மனதில் நினைத்துக் கொண்டு தொடர் பிரார்த்தனை செய்யலாம்.
?அஷ்டதிக் கஜங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் எட்டு திசையில் இருக்கும் யானைகள் என்றுதானே பொருள்? அவற்றின் பெயர்கள் என்ன?
– அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
உங்களது யூகம் சரியே. இந்திரனின் வாகனம் ஆன ஐராவதம் உள்ளிட்ட எட்டு யானைகளுக்கு “அஷ்ட திக் கஜங்கள்’’ என்று பெயர். ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீகம் என்பவை அஷ்டதிக் கஜங்கள் ஆகும். இந்த எட்டு யானைகளுக்கு உரிய பெண் யானைகள் முறையே அப்ரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்பரபர்ணி, சுபதந்தி, அங்கனை, அஞ்சநாவதி ஆகியவை. வேதமந்திரங்களுக்கு இடையே ஆங்காங்கே இந்தப் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் காண இயலும்.
?ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முன்னோர்களுக்கு திதி பண்ணும் பொழுது ஒன்றாக அமர்ந்து செய்யலாமா? தனித்தனியாகச் செய்ய வேண்டுமா?
– அபிலாஷ், சென்னை.
நான்கு சகோதரர்களும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்ற பொழுது அவர்கள் ஒன்றாகச் செய்வது தவறில்லை. ஆனால், திருமணம் நடந்து தனித் தனி குடும்பம் ஆகி விட்டால், அவர்கள் தனித் தனியாகத் தான் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி
இருக்கின்றார்கள்.
?எனது மகனுக்கு சனி தசை நடப்பதால், கோயிலில் எள் விளக்கு ஏற்றச் சொல்லியிருக்கிறார்கள். பணியின் நிமித்தம் அவனால் முடியவில்லை எனில் நான் விளக்கு ஏற்றலாமா?
– திலகவதி, சேலம்.
நீங்கள் உணவு உட்கொண்டால் உங்கள் மகனின் பசி தீர்ந்துவிடுமா? நீங்கள் மருந்து சாப்பிட்டால் அவருடைய உடல்நிலை ஆரோக்கியம் பெறுமா? யாருக்கு பசி எடுக்கிறதோ அவர்தான் உணவு உட்கொள்ள வேண்டும். யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர்தான் மருந்து சாப்பிட வேண்டும். விவரம் தெரியாத பச்சிளம் குழந்தையின் நலனுக்காக வேண்டுமானால் தாயார் பரிகாரம் செய்ய இயலும். வேலைக்குச் செல்லும் வயதில் இருக்கும் மகனுக்காக நீங்கள் விளக்கேற்றி வழிபடுவதைவிட அவரே நேரடியாக ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதே நல்லது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.
The post ?சுகப்பிரசவம் ஏற்பட என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்? appeared first on Dinakaran.