×
Saravana Stores

பீடி நிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டி தாக்குதல்: ரூ.12 லட்சம் பறித்த பாஜ நிர்வாகி உட்பட 6 பேர் கைது

ஜோலார்பேட்டை: திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி, இடையம்பட்டி நடுவூரை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகன் தியாகராஜ்(40). பிரபல பீடி நிறுவன உரிமையாளர். இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்தவர்.

கடந்த 23ம் தேதி காலை தியாகராஜ் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு பைக்கில் சென்றார். அங்கு வேலையை முடித்து கொண்டு திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென தியாகராஜை வழிமறித்தனர். சில நிமிடங்களில் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தியாகராஜை கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர், அவரது சட்டையை கழற்றி கைகளை கட்டி, கண்களை மூடி 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு தியாகராஜிடம் ₹1 கோடி கேட்டு மிரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது செல்போனில் இருந்து மைத்துனர் அரவிந்தனுக்கு போன் செய்த கும்பல், தியாகராஜை கடத்தி வைத்துள்ளதாகவும் ₹1 கோடி கொண்டு வந்து கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர், ₹50 லட்சமாவது கொடுத்தால் தான் விடுவிப்போம் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து, படிப்படியாக குறைத்து ₹25 லட்சம் கேட்டுள்ளனர். இறுதியாக ₹12 லட்சம் கொடுப்பதாக மைத்துனர் அரவிந்தன் ஒப்புக்கொண்டார். திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தர்மபுரி மேம்பாலம் கீழ் வந்து, ₹12 லட்சத்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் அரவிந்த் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த கும்பல் தியாகராஜை சட்டை கழற்றப்பட்ட நிலையில் கண்களை கட்டி அந்த மேம்பாலத்துக்கு கீழே விட்டுவிட்டு தப்பியது.

இதையடுத்து, தியாகராஜ் படுகாயங்களுடன் அவ்வழியாக சென்ற ஆட்டோவை பிடித்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து செல்போனில் பேசி குடும்பத்தினரை வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து தியாகராஜ் கூறியுள்ளார். சிகிச்சைக்குப்பின் நேற்று வீடு திரும்பினார்.

இதற்கிடையில், மகன் கடத்தப்பட்டது குறித்து யுவராஜ் கந்திலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் தியாகராஜிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து, அவரது மைத்துனரான பொன்னேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரவிந்தன்(35), ₹1 கோடி பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. அதன்படி ஆட்களை நியமித்து தியாகராஜை கடத்திவிட்டு, கடைசியில் ₹12 லட்சம் பறித்துக்கொண்டு அவரை விடுவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் அரவிந்தன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தினகரன்(21), விஷ்வா(20), அஜித்குமார்(25), சிவராஜ் பேட்டையை சேர்ந்த பாஜ வெளிநாடு வாழ் பிரிவு மாவட்ட தலைவர் வீர மணிகண்டன்(33), சாண்டி என்கிற சந்தோஷ்(34) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post பீடி நிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டி தாக்குதல்: ரூ.12 லட்சம் பறித்த பாஜ நிர்வாகி உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BDI ,CEO ,Jolarpetta ,Yuvraj ,Tirupathur District ,Jolarpet Municipality ,Idyampatti Naduvar ,Tiagaraj ,Beatty ,secretary of state ,Congress ,Thiagaraj ,Tirupathur ,Bidi ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக நகராட்சி கடையின் மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்தது