×
Saravana Stores

பாலியல் அத்துமீறலை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் நடிகைகள் திரைத்துறையினர் மீது 17 பலாத்கார புகார்கள்: நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: மலையாள திரைத்துறையில் பாலியல் அத்துமீறலை நடிகைகள் அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருகின்றனர். திரைதுறையினர் மீது இதுவரை 17 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் சித்திக் மீது திருவனந்தபுரம் போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின்னர் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்பட பலர் மீது நாளுக்கு நாள் பலாத்கார புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் மோகன்லால் தலைமையிலான நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிப்பதற்காக 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவிடம் பல நடிகைகள் இமெயில் மூலம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
டைரக்டர் ரஞ்சித் மீது மேற்குவங்க நடிகையான ஸ்ரீலேகா மித்ரா கொச்சி போலீஸ் கமிஷனருக்கு இமெயில் மூலம் புகார் கொடுத்தார். நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் டிஜிபிக்கு இமெயில் மூலம் புகாரை அனுப்பி வைத்தார். நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளை ராஜு, பாபுராஜ், இடைவேளை பாபு உள்பட 7 பேர் மீது புகார் கூறிய நடிகை மினு முனீர், போலீஸ் தனிப்படைக்கு இமெயில் மூலம் புகாரை அனுப்பியுள்ளார்.

நடிகரும், மலையாள நடிகர்கள் சங்க முன்னாள் இணை செயலாளருமான பாபுராஜ், பிரபல டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோருக்கு எதிராக ஒரு ஜூனியர் நடிகை தனிப்படையிடம் இமெயில் மூலம் புகார் கொடுத்துள்ளார். கேரள முதல்வருக்கும் சிலர் புகார் அளித்து வருகின்றனர். எங்கு புகார் கொடுத்தாலும் அவை அனைத்தும் உடனுக்குடன் போலீஸ் தனிப்படைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புகார் கிடைத்தவுடன் தனிப்படை விசாரணையை தொடங்குகிறது. எஸ்பி பூங்குழலி தான் இவற்றை விசாரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வரை 17 புகார்கள் கிடைத்துள்ளன.

புகார் அளிப்பவர்களிடம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ரகசிய வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஏற்கனவே ஒரு இளம் நடிகை மலையாள நடிகர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளரும், பிரபல நடிகருமான சித்திக் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். 2016ம் ஆண்டு தன்னுடைய 21வது வயதில் சினிமா குறித்து பேச வேண்டும் என்று கூறி திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து சித்திக் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.

தன்னை மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த மேலும் பல நடிகைகளை சித்திக் பலாத்காரம் செய்துள்ளார் என்றும், தான் சினிமாவை விட்டு விலகி விட்டதால் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் தான் பலாத்காரம் செய்தது குறித்து வெளிப்படையாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் டிஜியிடம் இமெயில் மூலம் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து நடிகர் சித்திக் மீது பிஎன்எஸ் 376 (பலாத்காரம்), 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடிகையின் புகார் காரணமாகத்தான் நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 நடிகைகள் வாக்குமூலம்
நடிகர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூறிய நடிகைகளிடம் சிறப்பு விசாரணைக் குழு நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்று வருகிறது. நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் நேற்று திருவனந்தபுரத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதே போல நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறிய 2 நடிகைகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதில் கிடைக்கும் தகவல்களை பரிசோதனை செய்த பின்னர் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று விசாரணைக் குழு தலைவர் ஐஜி ஸ்பர்ஜன் குமார் கூறினார்.

எம்எல்ஏ முகேஷ் பதவி விலகக் கோரி போராட்டம்
பிரபல மலையாள நடிகரான முகேஷ் கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாக உள்ளார். இவர் மீது மினு முனீர் உள்பட சில நடிகைகள் பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து முகேஷ், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி பாஜ, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கொல்லத்திலுள்ள வீடு மற்றும் அவரது அலுவலகம் முன் காங்கிரஸ் மற்றும் புரட்சி சோஷலிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அலுவலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

மூத்த நடிகரை கன்னத்தில் அறைந்தேன்
மலையாளத்தில் 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் உஷா ஹசீனா. தன்னிடமும் பல நடிகர்கள், டைரக்டர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது டைரக்டர் துளசிதாஸ் உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கூறியது: கடந்த 1992ல் பஹ்ரைன் நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டோம். அப்போது லிப்டில் வைத்து ஒரு மூத்த நடிகர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த நான் அவரது கன்னத்தில் அறைந்தேன். நடந்த சம்பவம் குறித்து நான் அனைவரிடமும் சொல்வேன் என்று அவரிடம் கூறினேன். உடனே என்னுடைய காலில் விழுந்து, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.

ஆனாலும் மோகன்லால் உட்பட அனைவரிடமும் விவரத்தை கூறினேன். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் திமிர் பிடித்தவள் என்றும், மூத்த நடிகர்களை மதிக்காதவள் என்றும் சிலர் வதந்தி பரப்பினர். அதன் பிறகு தான் எனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. என்னிடம் தகாத முறையில் நடந்த அந்த மூத்த நடிகர் இப்போது உயிருடன் இல்லை. எனவே அவரது பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் யார் என்பதை விரைவில் கூறுவேன்: நடிகை பேட்டி
பிரபல மலையாள முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு மலையாள நடிகை கூறியிருந்தார். அவரிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அந்த நடிகை நிருபர்களிடம் கூறியது: படப்பிடிப்பின் போது என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடிகர் மீது நான் புகார் கூறியிருந்தேன். இது தொடர்பாக போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். நான் நடந்த விவரங்கள் அனைத்தையும் போலீசிடம் தெரிவித்துள்ளேன். அந்த நடிகர் யார் என்பது குறித்து என்னுடைய வீட்டினரை கலந்து ஆலோசித்து விரைவில் வெளியிடுவேன். தனிப்பட்ட லாபத்திற்காக நான் நடிகர் மீது புகார் கூறவில்லை. கலைத்துறையில் நான் சந்தித்த பிரச்னைகளைத் தான் தெரிவித்தேன். பத்திரிகையாளர்கள் என்று கூறி சிலர் என்னை தொடர்பு கொண்டு என்னை மிரட்ட முயற்சிக்கின்றனர். அதற்கு நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்கத்தை கலைத்ததற்கு எதிர்ப்பு
நடிகர் சங்க நிர்வாகிகளை தலைவர் மோகன்லால் அழைத்து அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென வற்புறுத்தினார். அதற்கு நடிகர்கள் டொவினோ தாமஸ், வினு மோகன், நடிகைகள் அனன்யா, சரயு உள்பட சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கட்டும், அதற்காக சங்கத்தை ஏன் கலைக்க வேண்டும் என்று இவர்கள் வாதிட்டனர். ஆனால் மோகன்லால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துக் கூறி ராஜினாமா செய்ய சம்மதிக்க வைத்தார். இதன் பிறகுதான் அனைவரும் ராஜினாமா செய்ய தீர்மானித்தனர்.

The post பாலியல் அத்துமீறலை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் நடிகைகள் திரைத்துறையினர் மீது 17 பலாத்கார புகார்கள்: நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : SITHICK ,Thiruvananthapuram ,general secretary ,Siddiq ,Actors Association ,
× RELATED திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு