கொல்கத்தா: பணியிடத்தில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக பெங்காலி திரைத்துறையினர் அரசின் டெலி அகாடமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெங்காலி திரைப்படத் துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள், மாநில அரசின் டெலி அகாடமிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் பிரபல பெண் கலைஞர்களான நடிகைகள் ரூபா கங்குலி, ஸ்வஸ்திகா முகர்ஜி, பாவ்லி டேம், சோஹினி சர்க்கார், சோஹினி சென்குப்தா, பிடிப்தா சக்ரவர்த்தி, சைதாலி தாஸ்குப்தா, அனுராதா ரே, சகுந்தலா பருவா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தில், ‘கொல்கத்தா பெண் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்குவங்க மக்களுடன் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் பலரும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். இருப்பினும், நாங்கள் பணிபுரியும் இடங்களில் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல், வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நம்மில் சிலர் சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
இவர்களின் செயல் வியக்கத்தக்கதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள், குழந்தைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்கின்றனர். பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவோ, தடைசெய்யவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ சரியான அமைப்பு எதுவும் இல்லை. பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. பெங்காலி திரைத்துறையில் கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேற்குவங்கத்தில் எழுந்துள்ளது.
The post ஹேமா கமிட்டி விவகாரம் எதிரொலி ; பணியிடத்தில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெங்காலி திரைத்துறையினர் அரசுக்கு கடிதம் appeared first on Dinakaran.