×
Saravana Stores

ஜார்கண்ட் முதல்வரின் நண்பர் மீதான வழக்கு; ஜாமீன் வழங்குவது விதி,சிறை என்பது விதிவிலக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவது என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நண்பர் பிரேம் பிரகாஷ் என்பவர், சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கலாம் என்ற பொதுவான சட்ட விதி; சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பொருந்தும். சிறை என்பது விதிவிலக்கு ஆகும்.

தனி மனித சுதந்திரம் என்பது எப்போதுமே ஒரே விதி தான்; அதனை சட்ட நடைமுறையின் மூலம் பறிப்பது விதிவிலக்கானது. அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதற்கான நடைமுறைகள் கடுமையாக இருப்பது கொள்கையை மீறியதாகும். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணை அலுவலகத்தில் வைத்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஒருவர் அளித்த வாக்குமூலங்கள் ஏற்கப்படாது. மேலும் இவ்வழக்கில் பிரேம் பிரகாஷ் பிரதானமானவர் அல்ல; மேலும் அவர் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு கிடையாது. அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

மேலும் இவ்வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள் அதிகம் பேர் உள்ளதால், விசாரணை தாமதமாகி வருகிறது. அதுவரையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த வழக்கு விவகாரத்தில் பிரேம் பிரகாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறோம். அவர் விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கோ செல்லக் கூடாது. வழக்கு தொடர்பான சாட்சியங்களை சந்திக்கவோ அல்லது கலைக்கவோ கூடாது’ என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ஜார்கண்ட் முதல்வரின் நண்பர் மீதான வழக்கு; ஜாமீன் வழங்குவது விதி,சிறை என்பது விதிவிலக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,CM ,Supreme Court ,NEW DELHI ,Chief Minister ,Hemant Soran ,Prem Prakash ,Dinakaran ,
× RELATED ராகுல்காந்தி ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு