*நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஆய்வு
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் அமைய உள்ள கண்ணாடி பாலத்துக்கான அடித்தள தூண்கள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஆய்வு செய்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைகிறது. அதிக பட்ச கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இப்பாலம் அமையும்.
இதற்காக இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மற்றும் 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடிப் பகுதியும், இரண்டு பக்கங்களில் கல் மண்டபமும் அமைக்கப்படுகிறது. இப்பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் புதுவையில் நடந்தது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை பக்கத்திலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
தற்போது பாலத்தின் இரு பக்கத்தையும் இணைக்கும் ஆர்ச் அமைப்பு பொருத்துவதற்கான அடித்தள பணியான இரும்பு தூண்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. இந்த பணியை பார்வையிட நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரியில் நடந்து வரும் கண்ணாடி பாலம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்த அவர், திட்டமிட்டப்படி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மண்டல கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு) ஜெயராணி, நாகர்கோவில் கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு) வேங்கட ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தொடர்பாக தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை – கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கண்ணாடி பாலம் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைய உள்ள கண்ணாடி பாலத்துக்கு ஆர்ச் அமைக்க அடித்தள தூண்கள் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.