புதுடெல்லி: சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தய விவகார மனுவை அவசர வழக்காக விசாரிக்க அவசியமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது.சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக வரும் ஆக. 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில், தனியார் நிறுவனம் சார்பில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது.
இந்த கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கான சாலை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த கார் பந்தயத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி முன்னாள் நிர்வாகியான பாலுசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார் பந்தயத்துக்காக ஏற்கனவே தமிழக அரசு ரூ.42 கோடி வரை செலவிட்டு இருப்பதாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை மாநகருக்குள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறாக இந்த அதிவேக கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் இவ்வழக்கின் விசாரணையின் போது, ‘தமிழக அரசு இந்த கார் பந்தயத்துக்காக செலவிட்ட ரூ. 42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து திருப்பி வசூலிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பந்தயங்கள் நடத்துவதாக இருந்தால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த பந்தயத்தை நடத்தும் நிறுவனம் ரூ. 15 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனைகளுடன் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை நடத்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த பந்தயம் நடைபெரும் இடங்களில் மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழக்கமுள்ள சாலைகள் உள்ளது. எனவே மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், ‘இதுபோன்ற காரணங்களே இல்லாத மனுக்களை எல்லாம் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க முடியாது. அதற்கான அவசியமோ அல்லது அவசரமோ தற்போது கிடையாது’ என்று கூறி மனுதாரரின் கோரிக்கை திட்டவட்டமாக நிராகரித்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் வரும் ஆக. 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில், சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
The post சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தய விவகாரம்; அவசர வழக்காக விசாரிக்க அவசியமில்லை: மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் appeared first on Dinakaran.