*பயணிகள் எதிர்பார்ப்பு
கடலூர் : கடலூர் துறைமுகம் சந்திப்பில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதிக்கான கட்டுமான பணிகள் எப்போது முடிவடையும் என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூரை துவக்கமாக கொண்டு திருச்சி, சேலம், மைசூர் ஆகிய ஊர்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் கடலூர்- திருச்சி இடையே ஒரே ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கடலூர்- சேலம் பயணிகள் ரயிலும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் கடலூர் துறைமுகத்தில் இருந்து தினசரி ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூரில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ள நிலையில், ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, மீட்டர்கேஜ் காலத்தில் கடலூர் துறைமுகம் சந்திப்பில் பெட்டிகளுக்கு தண்ணீர் பிடிக்கும் வசதி, தூய்மை செய்யும் வசதி உள்ளிட்ட ரயில்வே சேவை தொடர்பான வசதிகள் இருந்தது.
இருப்பினும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டபோது, சந்திப்பு ரயில் நிலையம் என்ற அடிப்படையில், இங்கு செய்ய வேண்டிய வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும், ஏற்கனவே கடலூரில் இருந்து புறப்பட்டு சென்ற ரயில்களை மீண்டும் இயக்கவில்லை. குறிப்பாக கடலூர்- சென்னை கடற்கரை இடையே இயங்கிய ரயில்கள் நிறுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில், மைசூர்- மயிலாடுதுறை ரயில்கள் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டு, தினந்தோறும் இயங்கி வருகின்றன. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து கடலூரில் இருந்து கிளம்பும் ரயில்களுக்கு தண்ணீர் பிடிக்கும் வசதி துறைமுகம் சந்திப்பில் ஏற்படுத்த டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. 2, 3வது நடைமேடை அமைந்துள்ள தண்டவாளத்தில் இரும்பு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அடுத்தகட்ட பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இதனால் கடலூர்- மைசூர் ரயில் பெட்டிகளுக்கு மயிலாடுதுறையில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது.
இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் கால விரயம் ஏற்படுகிறது. கடலூரில் காலை 8 மணி முதல் மாலை 3.40 மணி வரை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அந்த வேளையில், ரயில் பெட்டிகளுக்கும் தண்ணீரை எளிதில் நிரப்பலாம். ஏற்கனவே மயிலாடுதுறையில் அதிகப்படியான ரயில்களை கையாளும் நிலையில், மைசூர் எக்ஸ்பிரசுக்கு தண்ணீர் பிடிப்பதால் சுமை அதிகமாக உள்ளது. எனவே, கடலூர் துறைமுகம் சந்திப்பில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 நிமிட இடைவெளியில் 2 ரயில்கள்
கடலூர் துறைமுகத்தில் மாலை 3.37 மணிக்கு விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயிலும், 3.40 மணிக்கு கடலூர்- மைசூர் ரயிலும் மயிலாடுதுறையை நோக்கி புறப்படும் வகையில் கால அட்டவணை உள்ளது. இதில் 3.40 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. அதனால் மயிலாடுதுறை பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு தினந்தோறும் 15 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு செல்கிறது.
இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்புவதற்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது ஆகும். இப்பணிகள் முடிந்து மைசூர் எக்ஸ்பிரஸ் மாலை 4 மணிக்கு மேல் இயக்கப்படும் நிலையில் பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் செல்வதற்கு மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கடலூர் வந்து மைசூர் எக்ஸ்பிரசில் எளிதாக செல்லும் வகையில் இணைப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயண நேரம் குறையும்
கடலூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு கிளம்பும் மைசூர் ரயில் மயிலாடுதுறையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து 5.55 மணிக்கு புறப்படுகிறது. கடலூரில் இருந்து மயிலாடுதுறை 75 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதனை கடக்க சுமார் 2.15 மணி நேரம் ஆகிறது. இதற்கு முழு காரணம் கடலூரில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் பிடிக்கும் வசதியில்லாததே ஆகும். இந்த வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது, பயண நேரம் சுமார் 1 மணி நேரம் வரை குறையும்.
கடலூரில் 4.40 மணிக்கு ரயில் புறப்படும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வழிகோலப்படும். தற்போது, சிதம்பரத்தில் இருந்து மாலை 4.08 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. பயண நேரம் குறையும் பட்சத்தில் 5 மணிக்கு மேல் ரயில் கிளம்புமாறு அட்டவணை இருந்தால் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post கடலூர் துறைமுகம் சந்திப்பில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் கட்டுமான பணிகள் எப்போது முடியும்? appeared first on Dinakaran.