புதுடெல்லி: குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் இமாச்சல், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கி 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 200 மிமீ மழை கொட்டியது. இதனால் பன்ஸ்வாரா-உதய்பூர் சாலை வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிரதாப்கார்க் மாவட்டம் மிகவும் வறட்சியான ஒன்று.
அங்குள்ள பிபல்கந்த் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு 260 மிமீ மழை கொட்டியுள்ளது. இதே போல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குறைந்தது 132 மிமீ மழை முதல் 260 மிமீ வரை மழை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் ராஜஸ்தான் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலும் பல இடங்களில் பெருமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மோர்பி மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் சூழ்ந்த தரைப்பாலத்தை கடந்த டிராக்டர் அடித்துச்செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 17 பேரில் 10 பேர் தவானா கிராமம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டனர்.
காணாமல் போன 7 பேரை மீட்க நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை களம் இறங்கி உள்ளது. இதே போல் குஜராத்தின் பல பகுதிகள் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கெர்காம் தாலுகாவில் அதிகபட்சமாக 356 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. டாங்ஸ் மாவட்டத்தின் டாங்-அஹ்வா தாலுகாவில் 268 மிமீ மழையும், கப்ரடாவில் (வல்சாத் மாவட்டம்) 263 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதே போல் நர்மதா, சிரேந்திரநகர், ராஜ்கோட், தபி, மஹிசாகரந்த் மோர்பி, தாஹோத் மற்றும் வதோதராவின் சில பகுதிகளில் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளன. அங்கு தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
* சுரங்கக்கழிவுகளால் மூடிய நதியை மீட்ட நீதிமன்றம்
ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டத்தில் தாபி வனச்சரக பகுதியில் லபகோ மற்றும் பீபால்டா பகுதி இடையே ஓடிய ஏரு என்ற நதி அங்குள்ள சட்டவிரோத சுரங்க கும்பலால் முற்றிலும் அழிக்கப்பட்டது. பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டம் வழியாக சுமார் 40 கிமீ ஓடும் இந்த நதியின் நீளத்தில் 8 கிலோமீட்டர் சுரங்க கழிவுகளால் கொட்டி மூடப்பட்டது. இதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பித்தல் சனாதியா 2018ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அதில்,’ ஏரு நதி, பில்வாராவில் உள்ள திலஸ்வா மஹாதேவிலிருந்து உருவாகி ஆறு கிராமங்களைக் கடந்து லாமகோவில் உள்ள பூண்டிக்குள் நுழைகிறது. மொத்தம் 40 கிலோமீட்டர் ஓடும் ஏரு நதியின் 8 கிமீ நீளம் சட்டவிரோத சுரங்ககழிவுகளால் மூடுப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏரு நதியை மீண்டும் மீட்க உத்தரவிட்டது. அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. இப்போது 2 கிமீ தூரம் ஆற்றுப்பாதை உருக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நவம்பரில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குஜராத், ராஜஸ்தானில் கொட்டித்தீர்த்த மழை: வெள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் மாயம் appeared first on Dinakaran.