செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி கரிசல் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அது பலனளிக்கவில்லை. மாறாக யானை கரிசல் குடியிருப்பு ஊர் பகுதியில் உள்ள குளத்தை சுற்றி உலா வந்தது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகச்சாமி (53) என்ற விவசாயியை ஒற்றை யானை மிதித்து தள்ளியது. இதில் படுகாயத்துடன் தப்பியவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து கிராமத்தில் மின்தடை செய்யப்பட்டு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என ஒலிப்பெருக்கியில் போலீசார் எச்சரித்தனர். இதனால் யாரும் வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர். எம்எல்ஏ கிருஷ்ணமுரளி அங்கு வந்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி நடந்தது. அதுவும் பலனளிக்கவில்லை. இதனால் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.
The post செங்கோட்டை அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை மிதித்து விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.