×

காசாவில் ‘ஹமாஸ்’ நடத்தும் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ‘ஹிஸ்புல்லா’ உருவானது எப்படி?

காசா:காசாவில் இஸ்ரேல் படையின் மீது ‘ஹமாஸ்’ படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஹிஸ்புல்லா’ களத்தில் இறங்கியுள்ளதால் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், லெபனானும் எல்லையைப் பகிர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகர் பலியானார். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது.

இருவரின் கொலைக்குப் பழிக்குப் பழியாக இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ்புல்லா ஏற்கெனவே எச்சரித்தது. இந்தச் சூழலில், வடக்கு இஸ்ரேல் ராணுவ தளங்களைக் குறிவைத்து நேற்று அதிகாலை முதல் ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லாக்கள் ஏவி வருகின்றனர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள், ஏராளமான ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) இருபுறமும் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களால் போர் பதற்றமான சூழல் ஏற்பட்டபோதிலும், அதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த விரிவான தகவல் வெளியாகவில்லை. காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால், இஸ்ரேல் மீதான தங்கள் தாக்குதல் கைவிடப்படும் என்று ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாக்கள் களம் இறங்கியுள்ளதால், அவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

லெபனானில் கடந்த 1982ல் நடந்த உள்நாட்டுப் போரின் போது ஹிஸ்புல்லா அமைப்பு உருவானது. இந்த அமைப்பு ஷியா அடிப்படைவாத இஸ்லாமியக் குழுவாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், ஹிஸ்புல்லா அமைப்பை தீவிரவாதக் குழுவாகக் கருதுகின்றன. அதேபோல் சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் வளைகுடா அரபு நாடுகள், இந்த அமைப்பை தீவிரவாதக் குழு என்றே அழைக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நாடாக கருதப்படும் ஈரான், ஹமாஸ் குழுவை ஆதரிப்பது போன்று ஹிஸ்புல்லா அமைப்பையும் ஆதரிக்கிறது. தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

ஈராக், சிரியா போன்ற நாடுகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்ளனர். அதேபோல் ஏமனில் ஹவுதி தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரிட்டதாக சவுதி அரேபியா அரசு கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவின் முக்கிய பணி என்னவென்றால், லெபனானை இஸ்ரேலிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதேநேரம் ஹிஸ்புல்லாவை லெபனானின் சில கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பானது, நாட்டை பலவீனப்படுத்தி வருவதாகவும், லெபனானை வேண்டுமென்றே போருக்கு இழுத்துவிட்டதாகக் கூறுகின்றன. லெபனானில் கடந்த 1992 முதல் ஹிஸ்புல்லா அமைப்பினர் தேர்தல் அரசியலில் பங்கேற்று ஆட்சி அதிகாரித்திலும் உள்ளதால், லெபனாவை தங்களது கட்டுக்குள் வைத்துள்ளனர்.

லெபனான் அதிகாரிகள் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத குழுக்கள், மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் தளங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி உள்ளன. கடந்த 1983ல் 241 ராணுவத்தினரைக் கொன்ற தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த 1983ம் ஆண்டு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் ஹிஸ்புல்லா இருந்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் யூத சமூக மையத்தின் மீதான தாக்குதல் மற்றும் 1992ம் ஆண்டு இஸ்ரேலிய தூதரகத்தின் மீதான தாக்குதலிலும் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு இருந்தது என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க போர்கப்பல்கள் கண்காணிப்பு:
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று அதிகாலையில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி ஏவுகணைகள் ஏவப்படுகிறது. இதற்கிடையே ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது. ஆனால் லெபனான் மீது அமெரிக்கா தாக்கலில் ஈடுபடவில்லை. ஈரான், லெபனானின் ஹிஸ்புல்லா ஆகியோரின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், ‘இரண்டு விமானம் தாங்கிய போர்க்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல், மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு சென்றது. ஏற்கனவே யுஎஸ்எஸ் வாஸ்ப் ஆம்பிபியஸ் போர்கப்பல், ஏற்கனவே மத்தியதரைக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

‘குளோபல் ஃபயர் பவர்’ என்ன சொல்கிறது?
ஈரானின் ஆதரவுடன் வளர்ந்த ஹிஸ்புல்லா, உலகிலேயே மிகவும் ஆபத்தான ஆயுதங்களைக் கொண்ட அரச சார்பற்ற அமைப்பாக உள்ளது. ஹிஸ்புல்லாவிடம் மிகவும் துல்லியமான தாக்குதல் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளன. இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடிய பல ஆயுதங்களை ஹிஸ்புல்லா தனது ஆயுதக் கிடங்கில் வைத்துள்ளது. சுமார் 2,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய மிகவும் ஆபத்தான ஆளில்லா விமானம் ஹிஸ்புல்லாவிடம் உள்ளது. சுமார் 1 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தை வைத்துள்ளதாக கூறுகிறது. ‘குளோபல் ஃபயர் பவர்’ வெளியிட்ட அறிக்கையின்படி, இஸ்ரேலிடம் 6.46 லட்சம் வீரர்கள் உள்ளனர்; அவர்களில் 1.70 லட்சம் வீரர்கள் காசா உள்ளிட்ட பகுதியில் போரிட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிடம் ஓர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாங்கிகள், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 650க்கும் மேற்பட்ட தானியங்கி பீரங்கிகள் உள்ளன. இஸ்ரேலிடம் வலுவான கடற்படை மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளன. மேலும் சுமார் 146 ஹெலிகாப்டர்கள், 48 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 241 போர் விமானங்கள் உள்ளன. நேற்று 300 ராக்கெட்டுகளைக் கொண்டு ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் தரப்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில் பெரும்பாலான ஹிஸ்புல்லா ராக்கெட்டுகள், அயர்ன் டோம் மூலம் அழிக்கப்பட்டன. ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நேரடி போர் நடந்தால், அதில் இஸ்ரேல் வெற்றி பெறும். ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்கினால், இஸ்ரேல் சிக்கலைச் சந்திக்க நேரிடும். ஆனால் கடந்தகால வரலாற்றை பார்க்கும் போது இஸ்ரேல் எப்போதெல்லாம் பலவீனமாகிறதோ அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவாக நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post காசாவில் ‘ஹமாஸ்’ நடத்தும் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ‘ஹிஸ்புல்லா’ உருவானது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Hizbullah ,Israel ,Hamas ,Gaza ,army ,Hezbollah ,Gaza Strip ,Palestine ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் படை தாக்குதலில் காசாவில் 40 பேர் பலி