×

மாமல்லபுரத்தில் ₹90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை: மாமல்லபுரத்தில், ₹90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் குடைவரை மண்டபங்கள், கோயில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றை பாறைகளை குடைந்து அழகுர செதுக்கி உள்ளனர். அவைகள், உலக புகழ் வாய்ந்த பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு, சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில் இன்னும் நவீன பேருந்து நிலையம் அமைக்கவில்லை. தற்போது, தலசயன பெருமாள் கோயில் நுழைவு வாயிலுக்கு அருகே ஒரு குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியாக பேருந்து நிலையமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த, குறுகிய பேருந்து நிலையத்துக்கு 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு, ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் வருவதால், பேருந்துகளை நிறுத்த போதிய இடமில்லாததால், சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி வெளியே செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மேலும், இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை.

இதனால், பேருந்து நிலையம் வரும் சுற்றுலாப் பணிகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1992ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளது போன்று, ஒரு நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான  கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த, 2006-2011 வரை தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஊருக்கு வெளிப்புற பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ₹18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றிய பொதுப்பணித் துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. பின்னர், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அங்கிருந்த செடி, கொடிகள் அகற்றும் பணிகள் தொடங்கியது. அதன்பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, பேருந்து நிலைய பணிக்கு ஒதுக்கப்பட்ட ₹18 கோடியை ஒன்றிய பொதுப்பணி துறை மீண்டும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. தொடர்ந்து, அதிமுக அரசு ₹18 கோடியில் இருந்து, ₹25 கோடியாக உயர்த்தி தனியார் நிறுவனத்திடம் பேருந்து நிலைய கட்டுமான பணியை ஒப்படைத்தது. கடந்த, 2020ம் ஆண்டு அங்கு மண் பரிசோதனைளும் மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் என சான்றிதழும் பெறப்பட்டது.

அதன்பிறகு, அங்கு வேறு எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. அடிக்கடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஆய்வு செய்கின்றனரே தவிர, பணிகள் தொடங்குவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. பேருந்து, நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.79 ஏக்கர் நிலம், நிலத்தடி நீரை உறிஞ்சும் வேலிகாத்தான் மரமும், ஒரு சில சீமைகருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காடு போல் காட்சி அளித்தது. கடந்தாண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வு செய்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 15 மாதத்தில் அனைத்து பணிகளும் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தார். ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை தடை காரணமாக பணிகள் தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில், கடந்தாண்டு சென்னை பெருநகர வளர்ச்சி மானியக் கோரிக்கையின் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக் கூடிய பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான வெட்டுத் தீர்மானம் முன் வைக்கப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்வைத்தார்.

இச்சூழலில், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு சட்ட மன்றத்திலேயே இந்த வெட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், கோரிக்கைக்கு செவி சாய்த்து ₹90.50 கோடி பஸ் நிலைய கட்டுமான பணிக்கு செலவிடப்படும். விரைவில், அங்கு ஆய்வு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

இந்நிலையில், ₹90.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன், வெளிநாடுகளில் உள்ளது போன்று பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த மார்ச் 13ம் தேதி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், மழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியதால் கட்டுமானப் பணி தடைபட்டது. இந்நிலையில், அங்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அதிநவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 32 ஆண்டுகளாக எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்பதால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, கோயம்பேடு, தி.நகர், பிராட்வே, அடையார், திருவான்மியூர், கிண்டி, அசோக் பில்லர், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால், பேருந்துகள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் தற்போது, மாநகர பஸ்கள் மற்றும் தமிழ்நாடு அரசு டவுன் பஸ்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இருக்கைகள் மற்றும் நிழற்குடை இல்லாததால் குறுகிய இடத்தில் பல மணி நேரம் கால்கடுக்க பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் நடந்த சென்னை பெருநகர வளர்ச்சி மானியக் கோரிக்கையில், மாமல்லபுரம் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு ₹90.50 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகளை, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வந்தால், இங்கு வரும் அனைவரும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் புரதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு சிரம மின்றி சுலபமாக வீடு திரும்பி செல்வார்கள் என்றனர்.

தமிழக அரசுக்கு சுற்றுலா பயணிகள் நன்றி
மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலுக்கு அருகே 6.79 ஏக்கர் பரப்பளவில் ₹90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. 32 ஆண்டுகளுக்கு பிறகு பணியை தொடங்கி உள்ள தமிழ்நாடு அரசுக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முறையான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி
தற்போது பல்வேறு வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை மற்றும் செல்போனுக்கு சார்ஜர் போடுவதற்கு மின்சார வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் ₹90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,CHENNAI ,UNESCO ,Tamil Nadu ,
× RELATED திருப்போரூர் பேருந்து நிலையத்தில்...