கடலூர், ஆக. 26: கடலூர் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே நொச்சிக்காடு பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் டிஎஸ்பி பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குமாரசாமி, உள்ளிட்ட போலீசார் அங்குள்ள பட்டாசு குடோனில் நேற்று அதிரடியாக சோதனை
நடத்தினர்.
அப்போது அனுமதியின்றி 350 கிலோ வெடி மருந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வட்டாட்சியர் பலராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தாசில்தார் வந்து விசாரணை நடத்தியதில், ராஜேஷ் என்பவர் பட்டாசு கடை நடத்துவதற்கு உரிமம் பெற்று இருந்தார். ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன் பிறகு ராஜேஷ் தம்பி ரமேஷ் அந்த பட்டாசு கடையை நடத்தி வந்ததும் அதன் பிறகு பட்டாசு கடை நடத்துவதற்கு மட்டும் அனுமதி வாங்கியும், சட்டவிரோதமாக சிவகாசியில் இருந்து வெடி மருந்துகளை வாங்கி அதனை அருகில் உள்ள குடோனில் வைத்து நாட்டு வெடி தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதில் பட்டாசு தயாரிப்பதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா, இந்த வெடி பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதி பெற்றுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ரமேஷை தேடி வருகின்றனர்.
அதேபோல் திருப்பாதிரிப்புலியூர் அருகே எம்.புதூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 150 கிலோ வெடி மருந்தை போலீசார் பறிமுதல் செய்து ஜிந்தா என்பவரை (34) கைது செய்தனர். பின்னர் அவரிடம் எங்கிருந்து வெடி மருந்து வாங்கினார், வேறு எங்கேயாவது பதுக்கி வைத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பகுதியில் 500 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பறிமுதல் appeared first on Dinakaran.