×
Saravana Stores

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா: கூட்ட நெரிசலில் மகன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை பிரேமலதா நேற்று திறந்து வைத்தார். கூட்ட நெரிசலில் விஜயகாந்த் மகன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிக நிறுவனத்தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை பிரேமலதா திறந்து வைத்தார். அப்போது அவர் விஜயகாந்த் சிலையை கட்டியணைத்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா தொண்டர்களுக்கு 2 சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது துணைப் பொதுச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது தொண்டர்களின் கூட்டம் நெரிசல் காரணமாக விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் திடீரென மயக்கமடைந்தார் உடனடியாக அவர் சிகிச்சைக்காக காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பிரேமலதா அளித்த பேட்டி: தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். விஜயகாந்த் வாழ்வதற்காக ஆசையாக கட்டப்பட்ட இல்லம் வெகு விரைவில் திறக்கப்படும். நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் விஜயகாந்த் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக என்னை விஜய் சந்தித்தார். கோட் திரைப்படத்தில் விஜயகாந்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. முழுவதுமாக முடிக்கப்பட்டு சிறப்பு காட்சிகளை காண்பிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கலைஞருக்கு நாணயம் வெளியிடுவதில் தேமுதிகவிற்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. விஜய பிரபாகரனுக்கு கட்சியில் உரிய நேரத்தில் உரிய பதவி வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு பெற்று வந்தால் அதனை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* தலைவர்கள் புகழாரம்
சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்திற்கு நேற்று 72வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேமுதிகவின் நிறுவனத் தலைவர், மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்.

* ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: தமிழ் சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்ம பூஷன் விஜயகாந்தின் பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்.

* தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர். நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும். இதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

The post சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா: கூட்ட நெரிசலில் மகன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai Demutika ,Premalatha ,Chennai ,Demutika ,LATE ,VIJAYAKANT ,DEMUTIKA FOUNDER ,Chennai Demutika head ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை; மக்களுக்கு தேவையான...