- மெரினா, பெசன்ட் நகர்
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- நம்ம மெரினா
- நம்ம மெரினா நம்ம கூத்
- சென்னை மெரினா கடற்கரை PWD நடைபாதை
- தின மலர்
சென்னை: ‘நம்ம மெரினா நம்ம பெருமை‘ விழிப்புணர்வு இயக்கத்தில் மாநகராட்சியின் பல்வேறு திட்டங்களின் வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகில் மாநகராட்சியின் ‘நம்ம மெரினா நம்ம பெருமை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி பணியாளர்கள் மிக நீண்ட மெரினா கடற்கரையினையும், பெசன்ட் நகர் கடற்கரையினையும் அழகுடனும், பொலிவுடனும் கண்காணிக்க ஏதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனம் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சத்தில் 3 ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நீர்நிலைகளில் 3.5 மீட்டர் கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் போன்ற அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளின் மணற்பரப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதனையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சியில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அப் பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 தன்னார்வலர் குழந்தைகளை பாராட்டி சான்றிதழ்களையும்
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு,
மண்டலக் குழுத் தலைவர் மதன்மோகன், துணை ஆணையாளர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், சாந்தகுமாரி, சர்பஜெயாதாஸ் நரேந்திரன், இளையஅருணா, நியமனக் குழு உறுப்பினர்கள் ராஜா அன்பழகன், வேலு, மாமன்ற ஆளுங்கட்சித் துணைத் தலைவர் காமராஜ், மாமன்ற உறுப்பினர் மங்கை உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மெரினா, பெசன்ட்நகரில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.