×

லெபனான் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

ஜெருசலேம்: லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் நடந்த இந்த முழு வீச்சிலான தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல அண்டை நாடுகளில் இருந்தும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

இஸ்ரேலை ஒட்டிய லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரலில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் மீதும் இஸ்ரேல் குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக ஈரான் ராணுவம் முதல் முறையாக இஸ்ரேல் மீது 300 ராக்கெட்களை ஏவி நேரடி தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவானது.

அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தலையிட்டதன் மூலம் அப்பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், லெபனானில் நேற்று அதிகாலை ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கலிலீயில் பொதுமக்களையும், ராணுவ தளங்களையும் குறிவைத்து ஹிஸ்புல்லா பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த ரகசிய தகவல் கிடைத்த நிலையில் தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

லெபனான் எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் விமானப்படையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் தெற்கு லெபனான் எல்லையில் குண்டு மழை பொழிந்தன. இதில், ஹிஸ்புல்லா படையினர் தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறி உள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், வேறு யாருக்கும் காயமில்லை என லெபனான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா படையும் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை தொடுத்தது. இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து, 300க்கும் மேற்பட்ட ராக்கெட், ஏவுகணைகள், டிரோன்களை ஏவி பதில் தாக்குதல் நடத்தியது. இதில், தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் தலைமையகத்தையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் தொடர்ந்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த பதில் தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், 99 சதவீத ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதே சமயம், ஹிஸ்புல்லாவின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி ஷுக்கர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு இஸ்ரேல் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தியதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், இந்த விஷயத்தில் இஸ்ரேல் தான் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா கூறி உள்ளது. இதுவரை எல்லையில் மட்டுமே சிறிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல், ஹிஸ்புல்லா படைகள் இடையே முழு வீச்சில் நடந்திருக்கும் முதல் மோதல் இது.

அதோடு, ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதலை ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு பாராட்டி உள்ளது. ஹிஸ்புல்லா போலவே தங்களும் விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நேரம் நெருங்கிவிட்டதாகவும் எச்சரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பும் ஹிஸ்புல்லாவை பாராட்டி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நிலையை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

* ‘இது முடிவல்ல’
போர் பதற்றத்திற்கு நடுவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்கள் மக்களையும், நாட்டையும் தற்காத்துக் கொள்ள எங்களுக்கு முழு உரிமையும் கடமையும் உண்டு. எங்களை காயப்படுத்த நினைப்பவர்களை நாங்கள் காயப்படுத்துவோம்.

கலிலீயில் எங்கள் மக்களின் உயிரை பறிக்க இருந்த ஆயிரக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை நாங்கள் அழித்துள்ளோம். தற்காப்பு தாக்குதல் நடத்தி உள்ளோம். இது வடக்கில் நிலைமையை மாற்றுவதற்கான மற்றொரு நடவடிக்கை. இது முடிவல்ல’’ என்றார். இருதரப்பு தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கான விமான சேவையை சில நாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்திவைத்தன.

The post லெபனான் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Hizbullah ,Lebanon ,Middle East ,Jerusalem ,Hezbollah ,Israel ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல்!