கீவ்: ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 21ம் போலந்து சென்றார். அங்கிருந்து நேற்று பிரதமர் ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து அதிபர் மாளிகையில் ஜெலன்ஸ்கி – பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அந்த சந்திப்பு மிக நன்றாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக எனது கருத்துகளை முன்வைத்தேன். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை பல உலக நாடுகளும் நிறுத்திவிட்டன. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனை இந்தியா நிறுத்தினால் புதின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். புதினுடைய பொருளாதாரம் ஆயுதம் சார்ந்தது. அவருடைய கரங்களை இந்தியா, சீனா எண்ணெய் இறக்குமதி வலுவாக்கின்றன. அந்த வகையில் ரஷ்ய ஆயுதப்படையை பலப்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்.
இந்தியா நினைப்பதுபோல் புதின் இந்தியாவை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தகர்த்திருக்காது. இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து!! appeared first on Dinakaran.