×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

திருச்செந்தூர் ஆவணிப் பெருவிழா24.8.2024 – சனி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். திருச்செந்தூரில் முருகன்தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். குமரவிடங்கப் பெருமான் சண்முகரின் உற்சவர். அலைவாயகந்தப் பெருமான் ஜெயந்திநாதரின் உற்சவர். இந்த நான்கு உற்சவர்களுக்குமே கோயிலில் தனித்தனி சந்நதிகள் இருப்பது சிறப்பு. வங்கக்கடலோரம் 2 ஆம் படைவீடாக அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வெகு சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெறும்.

இந்த ஆண்டின் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் 30.8.2024 வெள்ளிக்கிழமை அன்று சிவப்பு சாத்தி உற்சவமும், (சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில், சிவப்புப் பட்டாடைகளாலும் சிவப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்) 31.8.2024 அன்று பச்சை சாத்தி உற்சவமும் (பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா) நடைபெறும் 2.9.2024 அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும்.

பெருவயல் முருகன் விழா தொடக்கம் 24.8.2024 – சனி

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய பலனை ஒருசேரப் பெற பெருவயல் ரணபலி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீரதளவா வயிரவன் சேர்வை.

முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வரவேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி – தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு! என்று கூறினார். இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண் மனையில் ராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களையும் கொடுத்து உதவினார். அதன்பின்னர் கோயில் பணிகள் விரைவாக நடைபெற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகின்றன. வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப் பட்டுள்ளன. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார். பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்’ என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். இக்கோயிலில் இன்று ஆவணிப் பெருவிழா தொடக்கம்.

பானு சப்தமி + ஆவணி ஞாயிறு 25.8.2024 – ஞாயிறு

ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்தவுடன் பல் துலக்கி, கிழக்கே நின்று சூரியனை வணங்க வேண்டும். மாலை மேற்கே நின்று வழிபட வேண்டும். காலை சந்தி, உச்சிக்காலம், மாலை சந்தி நேரம் ஆகிய நேரங்களில் வழிபாடு செய்வதை சந்தியாவந்தனம் என்று சொல்வார்கள். குறைந்தபட்சம் காலைவேளை சூரிய நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமையும் செய்ய முடியாதவர்கள் ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் அவசியம் செய்ய வேண்டும். காரணம், ஆவணி மாதம் சூரியன் தனது சொந்த ராசியில் முழுமையான ஆட்சி பலத்தோடு இருப்பார். சில குடும்பங்களில் ஆவணி மாதம் ஞாயிறு காலை வீட்டுமுற்றத்தில் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பது உண்டு. இந்த சூரிய வழிபாட்டினால், ஆத்ம ஞானம் வளரும். உற்சாகம் சிறக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். கண்கள் ஒளி பெறும். சூரியனை வழிபடும் பொழுது ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யலாம்.

‘‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே,
பாச ஹஸ்தாய தீமஹி,
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்’’
– எனும் சூரிய காயத்ரி சொல்லலாம்.

பாஞ்சராத்திர ஜெயந்தி 27.8.2024 – செவ்வாய்

வைணவ ஆகமங்களில் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முக்கியமானது. ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்கள் பஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படையில் உள்ளவை. இந்த கோயில்களிலும், சில குறிப்பிட்ட வைணவர்கள் இல்லங்களிலும் இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை நட்சத்திரம் 27.8.2024 – செவ்வாய்

இன்று ஆவணி ரோகிணி. வைணவ ஆசாரியரான சுவாமி பெரியவாச்சான் பிள்ளை அவதார தினம். இவர் மட்டும் இல்லை என்று சொன்னால் ஆழ்வார் களின் நூல்களுக்கு அழகான விளக்கங்கள் கிடைத்திருக்காது. திருவாய்மொழிக்கு உள்ள மிகச் சிறந்த ஐந்து உரை நூல்களில் பெரிய வாச்சான் பிள்ளை இயற்றியருளிய 24000 படி மிக உயர்ந்த நூலாகும். வால்மீகி ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த வியாக்யானத்தைச் செய்தார். இது தவிர, பலப்பல ரகசிய நூல்களையும், ராமாயண மகாபாரதச் ஸ்லோகங்களுக்கு விரிவான அர்த்தத்தையும் அருளிச் செய்தார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரகசிய நூல்களை எழுதியுள்ளார். அருளிச்செயல் மற்றும் ராமாயணத்தில் அவருக்கிருந்த புலமை அபாரமானது. ஆழ்வார்கள் பாசுரங்களிலிருந்து தொகுத்த அவருடைய பாசுரப்படி ராமாயணம் பாராயணத்திற்கு ஏற்ற நூல். இந்த நூலில் ராமாயணம் முழுவதையும் ரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தினாலே, தான் பிற்காலத்தில் உள்ளவர்கள் அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் முடிந்தது. நாயனாரச்சான் பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், பரகாலதாசர் முதலியவர்கள் இவருடைய சிஷ்யர்கள். இவருக்கு “வியாக்யானச் சக்கரவர்த்தி” என்றும் “அபய ப்ரத ராஜர்” என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் அவதாரத் தலம் கும்பகோணம் அருகே சேங்கனூர்.

சட்டமுனி சித்தர் குருபூஜை 28.8.2024 – புதன்

பொய் என்றே எண்ணி எண்ணி
உலகம் கெட்டுப் போச்சு.
போச்சு அதனாலே அகத்தின் பேதமாச்சு

உலகத் துன்பங்களுக்கும், மன பேதங்களுக்கும், மனிதர்கள் பகைவர்களானதற்கும் காரணம் பொய்யே! என்று சொன்ன சித்தர் சட்டைமுனி. பல அற்புதமான நூல்களை (மருத்துவம்) எழுதியவர் என்கிறார்கள். சிவபெருமான் சட்டைமுனியின் நூல்களைப் பாதுகாக்க ரகசியமாக மலைக் குகைகளில் அவற்றை மறைத்து வைக்க உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சட்டைமுனியின் மேல் சிவபெருமானுக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு எனவும், சட்டை முனியை அவர் அடிக்கடி கயிலாயத்துக்கு அழைத்ததாகவும் அதனாலேயே, `கயிலாய கம்பளிச் சட்டை முனி’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கயிலை மலையின் கடுங்குளிரைத் தாங்க முடியாமல் அவர் எப்போதும் கம்பளிச் சட்டை அணிந்திருப்பாராம்! சட்டைமுனி சீர்காழி சட்ட நாதர் ஆலயத்தில் சித்தி பெற்றார் என்பதற்கு போகரின் ‘ஜெனன சாகரம்’ நூல் ஆதாரமாக உள்ளது. திருவரங்கத்தில் சமாதிகொண்டார் என்றும் ஒரு கருத்தும் உள்ளது! சட்டநாதர் ஆலய இடப்புறம் சிறிது தூரம் நடந்த உடனேயே கருங்கல் கட்டுமானத் திண்ணையில் சித்தர் சட்டைமுனியின் ஜீவசமாதி பீடம் காணப்படுகிறது! அவர் குருபூஜை இன்று.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்தில் பவனி 30.8.2024 – வெள்ளி

விநாயகர் சதுர்த்தி உற்சவங்கள் நாடெங்கும் தொடங்கும் நாள் இன்று. பல கோயில்களில் 10 நாள்கள் கோலாகல விழா நடைபெறும். அதில் பிரசித்தி பிள்ளையார்பட்டி கோயிலும் உண்டு. சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஒரு “குடைவரை” கோயிலாகும். “பல்லவ” மன்னர்கள் வழிவந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில். இக்கோயிலின் மூலவர் “கற்பக விநாயகர்”. விநாயகருக்கும் ஆறுபடைவீடுகள் இருக்கின்றன.

அதில் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் “ஐந்தாம்” படை வீடாகக் கருதப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும் ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. நிறைவு நாளில் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தனக்காப்பு” சாற்றப்படுகிறது.

பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய “கொழுக்கட்டை” விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கல்விகளில் மேன்மைபெற,வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காகக்தர்கள்வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்குஅபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

25.8.2024 – ஞாயிறு – திருப்போரூர் முருகன் பாலாபிஷேகம்.
26.8.2024 – திங்கள் – கிருஷ்ண ஜெயந்தி.
26.8.2024 – திங்கள் – கார்த்திகை விரதம்.
28.8.2024 – புதன் – மதுரை நவநீதகிருஷ்ணன் சேஷ வாகனம்.
29.8.2024 – வியாழன் – ஆவணி தேய்பிறை ஏகாதசி.
29.8.2024 – வியாழன் – திருச்செந்தூர் முருகன் காலை கோரதம் இரவு வெள்ளித் தேர்ப்பவனி.
30.8.2024 – வெள்ளி – திருச்செந்தூர் ஸ்ரீசண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Tricendoor Business ,Thiruchendur ,Sani Murugab Peruman ,Murugan ,Trincomalur ,Tricendoor Murugan ,GOD ,SANMUGAK ,Jayanthi Nathar ,Tiruchievre ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...