×
Saravana Stores

தொடர் மழை பெய்தும் நீர் வரத்து அதிகரிக்காததால் அணைகள் நிரம்பவில்லை

மஞ்சூர் : தொடர்ந்து பலத்த மழை பெய்தும் நீர் வரத்து போதுமானதாக இல்லாததால் மின் உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள பெரும்பாலான அணைகளும் நிரம்பவில்லை.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி,அவலாஞ்சி,எமரால்டு,பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட்,கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லுார் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின்நிலையத்தில் 40 மெகாவாட், காட்டுகுப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின்நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின்நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின்நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின்நிலையத்தில் 36மெகாவாட், மரவகண்டி மின்நிலையத்தில் 0.75மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10சதவீதம் மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின்தேவை அதிகமாக உள்ள ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின் தேவையை மேற்படி நீர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் மின் நிலையங்களில் இருந்து ெவளியேற்றபடும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை,ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை காரணமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல நாட்களுக்கு பலத்த மழை பெய்தது.இடைவிடாமல் பெய்த மழையால் பல இடங்களில் மண்சரிவுகள்,மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தொடர் மழை பெய்தும் மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளும் நிரம்பாத நிலையில் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் மழை பெய்தும் நீர் வரத்து அதிகரிக்காததால் அணைகள் நிரம்பவில்லை appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Upperbhavani ,Avalanchi ,Emerald ,Baikara ,Clanmarkan ,Dinakaran ,
× RELATED மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்