சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம் தற்கொலைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை. சிவராமன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறி வந்த நிலையில் சீமான் விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள காந்தி கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி, அங்கு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சிவராமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிவராமன், தான் எலி பேஸ்ட் உட்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிவராமனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவியல் நடுவர் விசாரணைக்கு பிறகு, சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாபவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது; சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே சாகப்போகிறேன் என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கட்சித் தம்பிகளிடம் அதைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான். குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
The post பாலியல் வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் மரணம் தற்கொலைதான்; சீமான் பேட்டி! appeared first on Dinakaran.