×

தாம்பரம் மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்: அதிகாரிகள் தகவல்


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சாலைகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் (2024-25) முதற்கட்டமாக ரூ.16.94 கோடியில் 35.580 கிலோமீட்டர் நீளத்திற்கு 156 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மாநில நிதி குழு மானியம் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதியில் 1.02 கோடி மதிப்பீட்டில் 1.510 கிலோமீட்டர் நீளத்திற்கு 16 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 15வது நிதி குழு மானியத்தில் 1.75 கோடி மதிப்பீட்டில் 3.650 கிலோமீட்டர் நீளத்திற்கு 17 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்பட்டமைப்பு திட்டத்தில் (2024-25) இரண்டாம் கட்டமாக 19.74 கோடி மதிப்பீட்டில் 40.460 கிலோமீட்டர் நீளத்திற்கு 253 சாலை பணிகளுக்கு கடந்த 16.8.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் சுமார் 109.646 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 56.98 கோடி மதிப்பீட்டிற்கு நிதி வேண்டி அரசிற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட உள்ளது.

அரசிடமிருந்து நிதி கிடைத்தவுடன் பணிகள் உடனடியாக துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளாக, மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் நடந்து வருகிறது. இதில் மழைநீர் வடிகால்வாய்களில் படிந்துள்ள கசடுகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த 345.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 3.68 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் 15.9.2024க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு சாலைகள் தற்காலிக சீரமைப்பு பணிகளாக தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் அதிக கனமழையினால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளை கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சேதமடையும் சாலைகளை போக்குவரத்திற்கு உகந்த வகையில் உடனுக்குடன் சீரமைத்திடும் நோக்கில் 53.650 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டுகளில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் இணைப்பு கால்வாய்களை இணைத்தல் மற்றும் பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்தல் மற்றும் இணைப்பு கால்வாய் பகுதிகளில் சிறுபாலங்களை சீரமைத்தல் மற்றும் தேவையான இடங்களில் புதிய சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள 125 பணிகளுக்கு ரூ.15.28 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திடும் பகுதிகளில் வெள்ள நீரினை வெளியேற்ற தேவையான மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற இதர தளவாட சாமான்கள் கொள்முதல் செய்தல், தனியார் வெளிகொணர்வு ஆட்கள் தயார் நிலையில் வைத்தல் மற்றும் ஏரிகள் மற்றும் கால்வாய்களில் வெள்ள நீர் வழிந்தோடும் பட்சத்தில் அதற்கு தேவையான மணல் மூட்டைகள் இருப்பு வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ரூபாய் 1.84 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு வரும் மழைக்காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Pallavaram ,Anagaputhur ,Pammel ,Sembakkam ,Perungalathur ,Birkankarani ,Madambakkam ,Chitlapakkam ,Tiruneermalai ,Dinakaran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு...