×

சாகுந்தலம் –திரை விமர்சனம்

‘சாகுந்தலம்’ என்பது, மகாகவி காளிதாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடக நூல். குப்த பேரரசர் 2ம் சந்திரகுப்தர் என்கிற சந்திரகுப்த விக்கிரமாதித்தியனின் அரசவைக்கவிஞராக இருந்தவர், காளிதாசர். சாகுந்தலா, துஷ்யந்தன் காதல் திருமணத்தை விளக்கும் ‘அபிஞான சாகுந்தலம்’ என்ற கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள பான் இந்தியா படமாக ‘சாகுந்தலம்’ வந்துள்ளது. தெலுங்கு இயக்குனர் குணசேகர், இதற்கு முன்பு மகேஷ் பாபு நடித்த ‘ஒக்கடு’, அனுஷ்கா நடித்த ‘ராணி ருத்ரமாதேவி’ உள்பட பல படங்களை இயக்கியவர். தற்போது அவர் இயக்கியுள்ள ‘சாகுந்தலம்’ படத்தில், சாகுந்தலாவாக சமந்தா, துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகன், துர்வாச முனிவராக மோகன் பாபு நடித்துள்ளனர். துர்வாசர் கோபத்தில் விடுத்த சாபமே சரித்திரக் காதலர்களான சாகுந்தலா, துஷ்யந்தன் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.

தன்னை மறந்த காதலன் துஷ்யந்தனை சாகுந்தலா எப்படி கரம்பிடித்தார் என்பது திரைக்கதை. வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த மகளான சாகுந்தலா என்கிற சமந்தா, ஒரு ஆசிரமத்தில் கன்வ மகரிஷியின் பாதுகாப்பில் சொந்த மகள் போல் வளர்கிறார். அப்போது மகாராஜா துஷ்யந்தன் என்கிற தேவ் மோகன், ஊருக்குள் திடீரென்று நுழைந்த காட்டு விலங்குகளை துரத்திக்கொண்டே ஆசிரமத்துக்கு வருகிறார். அங்கு சமந்தாவின் பேரழகில் மயங்கி அவரைக் காதலிக்கும் அவர், அரண்மனைக்குப் புறப்படுவதற்கு முன்பு, யாருக்கும் தெரியாமல் சமந்தாவை காந்தர்வ திருமணம் செய்கிறார். இதையடுத்து சமந்தா கர்ப்பமாகிறார்.

இதனால், கணவர் தேவ் மோகனை தேடி அரண்மனைக்குச் சென்ற சமந்தாவை, ‘நீ யார் என்றே எனக்கு தெரியாது. நீ ஒரு பெண் என்பதால் உயிர் பிச்சை தருகிறேன். என் நாட்டை விட்டே ஓடிவிடு’ என்று சொல்லி அவமானப்படுத்துகிறார். அங்கிருந்து சென்ற சமந்தா என்ன ஆனார்? கணவருடன் சேர்ந்தாரா? சமந்தாவை தெரியாது என்று தேவ் மோகன் சொல்ல என்ன காரணம் என்பது மீதி கதை. சமந்தாவின் திரைப்பயணத்தில் சாகுந்தலா கேரக்டர் என்பது, ஒரு லைஃப் டைம் கேரக்டர். அவரும் அதை உணர்ந்து சாகுந்தலாவாகவே மாறியுள்ளார். கர்ப்பமடைந்த பிறகும், கணவர் தன்னை அடையாளம் தெரியாமல் அவமானப்படுத்திய பிறகுமான அவரது நடிப்பும், வசனங்களும் உருக வைக்கிறது. அவரே டப்பிங் பேசியுள்ளார். மகாராஜாவுக்குரிய கம்பீரம் தேவ் மோகனிடம் சற்று குறைவு என்றாலும், வருகின்ற காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.

பரதனாக வரும் அல்லு அர்ஹா (அல்லு அர்ஜூன் மகள்), நீளமான வசனங்களை மழலைக்குரலில் பேசி அசத்துகிறார். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கவுதமி போன்றோருக்கு சிறிய வாய்ப்பு என்றாலும், தங்கள் இருப்பை நன்கு பதிவு செய்துள்ளனர். இன்றைய தொழில்நுட்பங்களின் உதவியுடன் புராணக்கதையைப் படமாக்கியுள்ள இயக்குனர் குணசேகர், திரைக்கதையை விறுவிறுப்பாக அமைக்காததாலோ என்னவோ, ஒவ்வொரு காட்சியும் பாடாய்ப்படுத்துகிறது. தமிழ் டப்பிங் பார்க்கும்போது, ஒவ்வொரு கேரக்டரும் வசனங்களை ஒப்பிப்பது போல் இருப்பது பலவீனமாக தெரிகிறது. படம் முழுவதிலுமான கிராபிக்ஸ் காட்சிகளால் சண்டைகள் கூட செயற்கைத்தனமாக இருக்கிறது. மணிசர்மாவின் இசையில் சில பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு, புராணக்கதையை ரசிகர்களின் கண்கள் வரை கடத்திச் செல்கிறது.

The post சாகுந்தலம் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahakavi Kalidasa ,Kalidasa ,Gupta ,Emperor ,Chandragupta II ,Chandragupta Vikramaditya ,Sagunthala ,Dushyanthan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்